கிரிக்கெட் விளையாடியபோது சோகம்: படக்கூடாத இடத்தில் பந்து பட்டு சிறுவன் உயிரிழப்பு

1 mins read
58b72168-d3de-43c2-9b13-5d36052f0de9
பந்து தாக்கியதும் வலி தாளாமல் ஷௌர்யா சுருண்டு விழுந்தது கண்காணிப்புப் படக்கருவியில் பதிவானது. - படம்: இந்திய ஊடகம்

புனே: கிரிக்கெட் விளையாடியபோது ஆணுறுப்புமீது பந்து பட்டதால் 11 வயதுச் சிறுவன் உயிரிழந்தான்.

இச்சம்பவம் இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், புனேயில் உள்ள லோகேகான் பகுதியில் சென்ற வாரம் நிகழ்ந்தது.

இப்போது பள்ளி கோடை விடுமுறைக்காலம் என்பதால், ஷாம்பு காளிதாஸ் காந்த்வே என்ற ஷௌர்யா தன் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி, பொழுதைக் கழித்து வந்தான்.

அப்படி ஒரு சமயந்தான் அவனது உயிரைப் பறிக்க காரணமாகவும் அமைந்தது.

ஷௌர்யா பந்துவீச, எதிர்முனையிலிருந்த பந்தடிப்பாளர் அதனை பலமாக அடித்தார். அப்பந்து நேராகச் சென்று ஷௌர்யாவின் பிறப்புறுப்பைத் தாக்கியது.

பந்து தாக்கிய வேகத்தில் ஷௌர்யா அங்கேயே சுருண்டு விழுந்தான். அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவனுடைய நண்பர்கள், அவனுக்கு உதவ விரைந்தனர். ஆனாலும், ஷௌர்யா சுயநினைவற்ற நிலையிலேயே இருக்க, அக்கம்பக்கத்தில் இருந்தவர்களின் துணையுடன் அவன் அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.

ஆயினும், ஷௌர்யாவின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

ஷௌர்யா விபத்தால் உயிரிழந்துவிட்டதாகக் காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்