புதுடெல்லி: ஈரானில் பதற்றமான சூழல் காணப்படும் நிலையில், அங்கிருந்து முதற்கட்டமாக 110 இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் ஈரானில் இருந்து பேருந்துகள் மூலம் அர்மேனியா நாட்டின் தலைநகர் யெரெவானுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்றும் பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் அமெரிக்கா வழியாக இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர் என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீட்பு விமானம் வியாழக்கிழமையன்று (ஜூன் 19) அதிகாலை டெல்லி வந்தடைந்தது.
மாணவர்களைக் கண்டதும் அவர்களின் பெற்றோர் நிம்மதிப் பெருமூச்சுடனும் கண்ணீருடனும் வரவேற்றனர்.
மீட்கப்பட்டவர்களில் 90 மாணவர்கள் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானில் உள்ள மற்ற மாணவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை அங்குள்ள இந்திய தூதரகம் மேற்கொண்டு வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த ஒரு வாரமாக இஸ்ரேல், ஈரான் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இருதரப்பிலும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதையடுத்து, ஈரானில் உள்ள 1,500க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களை மீட்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்த நிலையில், முதற்கட்டமாக 110 மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.