சென்னை: “உலக வங்கி நிதியுதவியுடன், தமிழகத்தில் 3,517 கோடி ரூபாயில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளோம்,’‘ என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை தரமணியில், உலக வங்கியின் உலகளாவிய வணிக மையத்தை முதல்வர் திறந்து வைத்து பேசியபோது, “தமிழகத்தின் உட்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி, பேரிடர் மேலாண்மை, நகர்ப்புற வளர்ச்சி என, பல்வேறு துறைகளில் உலக வங்கி நமக்கு உறுதுணையாக இருந்து வருகிறது.
“கடந்த 2022ஆம் ஆண்டு டெல்லிக்கு வெளியே, தன்னுடைய முதல் மண்டல அலுவலகத்தை, உலக வங்கி சென்னையில்தான் அமைத்தது. உலக வங்கியுடனான நம் நீண்ட நெடிய உறவு, பல்வேறு துறைகளில், பல நற்பலன்களை வழங்கி இருக்கிறது.
“சுய உதவிக் குழுக்களை ஊக்கப்படுத்தி, பெண்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தி இருக்கிறது. பணிபுரியும் பெண்களுக்காக தமிழகம் முழுதும் துவங்கி இருக்கும் தோழிகள் விடுதிகள் திட்டத்திலும், உலக வங்கியின் பங்கு இருக்கிறது.
“கூடிய விரைவில் சென்னையில் தாழ்தள மின்சார பேருந்துகள், தமிழ்நாடு கடலோர பேரிடர் துயர் தணிப்பு திட்டம் ஆகியவையும் உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்பட இருக்கின்றன.
“வரும் காலத்தில் உலக வங்கி உதவியுடன், 3,517 கோடி ரூபாய் மதிப்பில் சில திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த போகிறோம்.
“தமிழக பொருளாதாரத்தின் முதுகெலும்பே பெண்கள்தான். விவசாயத்தை தவிர, வளர்ந்து வரும் மற்ற துறைகளில் பெண் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, அடுத்த ஐந்து ஆண்டுகளில், 1,185 கோடி ரூபாய் மதிப்பில், உலக வங்கி உதவியுடன், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
“உலக வங்கியுடன் சேர்ந்து, இன்னும் பல திட்டங்களை செயல்படுத்தி, தமிழக மக்களின் தேவைகளை நிறைவேற்ற, என்னுடைய அரசு ஆர்வமாக இருக்கிறது. அதற்கான ‘பார்ட்னர்ஷிப்’ தொடர வேண்டும்,” என்று அவர் பேசினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிகழ்ச்சியில், உலக வங்கியின் மேலாண் இயக்குநர் வென்சாய் ஜாங், இந்தியாவிற்கான இயக்குநர் அகஸ்டே, தமிழக அரசு தலைமைச் செயலர் முருகானந்தம், உலகவங்கி சென்னை மையத் தலைவர் சுனில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.