பெங்களூரு: பெங்களூருக்குக் குடிபெயரும் எம்எல்ஏக்களில் பத்துக்கும் மேற்பட்டோர் இரண்டு திருமணங்கள் செய்துள்ளதாக கர்நாடக மாநில முதல்வர் டி.கே. சிவகுமார் சட்டமன்றத்தில் கூறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ளது.
கர்நாடகா சட்டமன்றத்தில் மாநிலத்தின் வறட்சி நிலவரம், பெங்களூரு நகரமயமாக்கல், பெரும் மக்கள்தொகை போன்ற விவகாரங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது.
விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய முதல்வர் டி.கே. சிவகுமார், “பல ஆண்டுகளாக பெங்களூரு நகரம் பலதரப்பட்ட மக்களை ஈர்த்து வருகிறது. இங்கு இடம்பெயர்ந்த பலரும் மீண்டும் தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்வது இல்லை.
“பெங்களூருக்கு வரும் சட்டமன்ற உறுப்பினர்கள்கூட திரும்பிச் செல்வதில்லை. பெங்களூரு வருவோர் இரண்டு திருமணங்களைச் செய்துகொள்கிறார்கள். 12 எம்எல்ஏக்கள் அவ்வாறு செய்துள்ளனர். என்னால் அந்தப் பட்டியலை தரமுடியும்.
“தார்வாட் மற்றும் தட்சிண கன்னடா போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த அத்தகைய சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர்களை குறிப்பிட முடியும். ஆனால், அந்த விவகாரத்திற்குள் மூக்கை நுழைக்க விரும்பவில்லை,” என்று தெரிவித்தார்.
பெங்களூருக்கு வரும் வழக்கறிஞர்களும்கூட தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதில்லை. அதனால்தான் நகரின் மக்கள்தொகை பெருகி உள்ளது என்று கூறிய அவர், நகர்ப்புற மக்கள் தொகை 33லிருந்து 47 விழுக்காடாக அதிகரித்துள்ளது என்றார்.
முதல்வர் சிவகுமாரின் பேச்சுக்கு, சட்டமன்றத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோகா பேசுகையில், “முதல்வரின் இந்தப் பேச்சு தேவையற்றது. அவர் கூறிய அந்த 12 எம்எல்ஏக்களின் பெயர்களை வெளியிட வேண்டும்.
“இந்தப் பேச்சு, பெங்களூருவுக்குக் குடிபெயர்ந்த பல எம்எல்ஏக்களின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது,”என்றார்.
பாஜக மூத்த எம்எல்ஏவான எஸ். சுரேஷ்குமார் பேசுகையில், “முதல்வர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டு இருந்தாலும் அவரின் இந்தப் பேச்சு தேவையற்றது. அந்த 12 எம்எல்ஏக்களின் பெயர்களை வெளியிடவேண்டும்,” என்று வலியுறுத்தினார்.
