ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசித் தாக்கியதில் 12 பேர் படுகாயமடைந்தனர்.
ஸ்ரீநகரின் லால் சவுக் என்னும் இடத்தில் ஞாயிறு சந்தைப் பகுதியில் உள்ள சுற்றுலா நிலையத்தின் மீது கையெறி குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதையடுத்து ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீநகரின் கான்யார் பகுதியில் லஷ்கர்-இ-தொய்பா குழுவினரின் தளபதி ஒருவர் பாதுகாப்புப் படையினரால் சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், இதுவரை இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரு குழுவும் பொறுப்பேற்கவில்லை.
இந்தக் கையெறி குண்டுத் தாக்குதல் சம்பவத்துக்கு ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் புழங்கும் இடத்தில் இதுபோன்ற கையெறி குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது கவலை தரக்கூடியது. இந்தத் தாக்குதலை யாரும் நியாயப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.

