பள்ளிப் பேருந்தில் 12 வயதுச் சிறுவன் மயங்கி விழுந்து இறந்த துயரச் சம்பவம் இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம், பிந்தில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 16) நிகழ்ந்தது.
அச்சிறுவனுக்கு இதயத்துடிப்பு நின்றுபோனதாக அவரைப் பரிசோதித்த மருத்துவர் கூறினார். மத்தியப் பிரதேசத்தில், இதயத்துடிப்பு நின்றுவிட்டதால் உயிரிழந்த ஆக இளம் வயதுச் சிறுவன் அவராகத்தான் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
நான்காம் வகுப்பு மாணவரான மணிஷ் ஜாதவ், வெள்ளிக்கிழமை பிற்பகல் பள்ளியில் தம்முடைய சகோதரருடன் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, பிற்பகல் 2 மணியளவில் பள்ளிப் பேருந்தில் ஏறினார்.
பேருந்தில் ஏறிய சற்று நேரத்தில் அவர் மயங்கி விழுந்துவிட்டதாக அவருடைய குடும்ப உறுப்பினர்கள் செய்தியாளர்களிடம் கூறினர்.
பேருந்து ஓட்டுநர் உடனடியாக பள்ளி நிர்வாகத்திற்கு இதுகுறித்து தெரியப்படுத்தினார். அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மணிஷை உயிர்பிழைக்க வைக்க மருத்துவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்ட அச்சிறுவன் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
"அவருக்கு சிபிஆர் வழங்கியும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. அவருடைய இதயத்துடிப்பு நின்றுவிட்டதாக அறிகுறிகள் காட்டின," என்று மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அணில் கோயல் கூறினார்.
அச்சிறுவனுக்கு பிரேதப் பரிசோதனை மேற்கொள்ள அவருடைய பெற்றோர் அனுமதி வழங்கவில்லை. தம்முடைய மகனுக்கு உடல்நலப் பிரச்சினைகள் இருந்ததில்லை என்று தந்தை கோமல் கூறினார்.


