இணைய மோசடிக் கும்பலிடம் சிக்கிய ஆந்திராவைச் சேர்ந்த 120 பேர் மீட்பு

2 mins read
6f7b7dc6-58c7-42e9-be29-06713da3f4c8
மோசடிக் கும்பலிடமிருந்து மீட்கப்பட்ட ஆந்திர இளையர்களுடன் இணையக் குற்றப் பிரிவு காவல்துறை உயரதிகாரி எஸ்.பி. அதி​ராஜ் சிங் ரானா. - படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்

அமராவதி: ‘வாட்ஸ் - அப்’, இன்ஸ்டகிராம், ‘டெலிகிராம்’ போன்ற கைப்பேசி செயலிகளில் வரும் போலியான விளம்பரங்களை நம்பியும் முகவர்கள் மூலமும் தெற்காசிய நாடுகளில் வேலைக்குச் சென்ற இந்திய இளையர்கள் சீனாவைச் சேர்ந்த இணைய மோசடிக் கும்பலிடம் சிக்கியிருந்தனர்.

மியன்மார் நாட்டிலிருந்து அவர்களைப் பாதுகாப்பாக இந்திய அரசு மீட்டது. அவ்வாறு மீட்கப்பட்டவர்களில் 120 பேர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள்.

தெற்கு ஆசிய நாடு​களான மியன்​மார், தாய்​லாந்​து, கம்​போடி​யா,லாவோஸ் ஆகிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறும் போலி விளம்பரங்களை நம்பி இளையர்கள் சிலர், ரூ.2 லட்சம் முதல் 3 லட்​சம்வரை செலவு செய்​து, மிகுந்த கனவு​களோடு சென்றதாக ஆந்​திர மாநில இணையக் குற்றப் பிரிவு காவல்துறை உயரதிகாரி எஸ்.பி. அதி​ராஜ் சிங் ரானா தெரிவித்தார்.

மேலும், முதலில் அந்த இளையர்கள் அனை​வரும் தாய்​லாந்​துக்குச் சென்றதாகவும் அங்கு அவர்​கள் சீன மோசடிக் கும்​பலிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அமராவதியில் ஜனவரி 13ஆம் தேதி நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார்.

அவர்​களை அக்கும்பல் கிடங்​கு ஒன்றில் அடைத்து வைத்ததாகவும் பின்னர், அமெரிக்​கா, ஆஸ்​திரேலி​யா​வில் வசிக்கும் இளம் பெண்களின் புகைப்​படங்​களு​டன் கூடிய போலி கணக்​கு​களைத் தயார் செய்​யும் பணி அவர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், அவற்றைச் சமூக ஊடகங்களில் உலவ விட்​டு, அக்கணக்குகளுடன் அரட்டை அடிக்க விரும்பும் நபர்களை மோசடி வலையில் சிக்க வைத்து அவர்களிடம் பணம் பறிக்கவேண்டியது அவர்களுக்கு வழங்கப்பட்ட வேலை என அதிகாரி தெரிவித்தார்.

மோசடிக் கும்பலிடம் சிக்கிய இளையர்கள் பெற்றோருக்குத் தகவல் அளித்ததால், இந்திய அரசு முயற்சி எடுத்து அவர்​களை மீட்​டுள்​ளது.

இந்​தி​யர்​கள் மட்​டுமன்​றி, இலங்​கை, பாகிஸ்​தான் நாட்​டைச் சேர்ந்தவர்​களும் அங்குச் சிக்​கி​யுள்​ளனர். இதில் இந்​தி​யர்​கள் மட்டுமே சுமார் 10,000க்கும் அதி​க​மானவர்​கள் இருப்​ப​தாகக் கூறப்படு​கிறது.

குறிப்புச் சொற்கள்