புதுடெல்லி: இந்தியக் கடலோரக் காவற்படையின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் தற்காப்பு அமைச்சு பெங்களூரில் உள்ள பாரத் மின்னணு நிறுவனத்திடம் (பெல்) புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
நம்பகமான தகவல்களைப் பாதுகாப்பாகவும் அதிகவேகமாகவும் பகிர 149 அதிநவீன மென்பொருள் வானொலிகளை பெல் நிறுவனத்திடம் இருந்து தற்காப்பு அமைச்சு கொள்முதல் செய்கிறது.
ரூ.1,220.12 கோடி மதிப்புள்ள அந்த ஒப்பந்தம் தொடர்பாகத் தற்காப்பு அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
உள்நாட்டிலேயே முழுக்க முழுக்க கருவிகளை வடிவமைத்தல், மேம்படுத்துதல், உற்பத்தி செய்தல் என்ற பிரிவின்கீழ் இந்தக் கொள்முதல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சு தெரிவித்தது.
விரைவான நடவடிக்கைகள் மூலம் கடல் தொடர்பான சட்டங்களைத் தீவிரமாக நடைமுறைப்படுத்துதல், கடலில் தேடல் மீட்பு நடவடிக்கைகள், மீனவர்கள் பாதுகாப்பு, கடலின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட கடலோரக் காவற்படையின் பொறுப்புகளை முழுமையாக மேற்கொள்ளும் வகையில் அதன் திறன் வலுப்பெறும்.
புது வசதி மூலம் முப்படைகளுக்குதேவைப்படும் பாதுகாப்புத் தளவாடங்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல வசதியாக ‘ஆா்டிஎஃப்எல்டி’ என்ற அதிக எடையைத் தூக்கிச் செல்ல உதவும் 1,868 லாரிகளை ரூ.697.35 கோடி செலவில் ஏஸ் (ஏசிஇ) நிறுவனம் மற்றும் ஜேசிபி இந்தியா நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தையும் தற்காப்பு அமைச்சு சில தினங்களுக்கு முன் மேற்கொண்டது.

