பள்ளி முதல்வரைச் சுட்டுக்கொன்ற 12ஆம் வகுப்பு மாணவன்

1 mins read
7995813a-18fc-4a35-aa7b-d60cbee33174
மாணவனுக்குத் துப்பாக்கி எப்படிக் கிடைத்தது என்பது குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது. - மாதிரிப்படம்: பிக்சாபே

போபால்: பள்ளி முதல்வரை 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 6) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்தது.

சத்தர்பூர் மாவட்டத்திலுள்ள அப்பள்ளியில், கழிவறைக்குச் சென்ற முதல்வரைப் பின்தொடர்ந்த அம்மாணவன், அருகிலிருந்து அவரது தலையில் சுட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

பின்னர் பள்ளி முதல்வரின் அலுவலகத்திற்குச் சென்ற அம்மாணவன், அவரது மோட்டார்சைக்கிள் சாவியை எடுத்துக்கொண்டு, அவரது வாகனத்தை ஓட்டித் தப்பினான். மாலையில் உத்தரப் பிரதேச மாநில எல்லையருகே அவன் பிடிபட்டான்.

கொலைக்கான காரணம் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.

சுரேந்திர குமார் சக்சேனா என்ற அந்த 55 வயது முதல்வர் கனிவுமிக்கவர் என்றும் மாணவர்களின்மீது மிகுந்த அக்கறைகொண்டு கூடுதல் முயற்சிகளை எடுப்பவர் என்றும் சக ஆசிரியர்கள் குறிப்பிட்டனர். வேறு யாருடனும் அவருக்குப் பிரச்சினை இருந்ததில்லை எனக் கூறப்பட்டது.

பள்ளியிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரு சிற்றூரில் அம்மாணவன் வசித்து வந்தான். ஒழுங்கீனமாக நடந்துகொண்டதற்காக முன்னர் அம்மாணவனை முதல்வர் சக்சேனா கண்டித்திருந்தார்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று மீண்டும் அவர் அம்மாணவனைக் கண்டித்ததோடு, மீறினால் அவன்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

முதல்வரைச் சுட்டுக்கொன்றபின், அவரது ஸ்கூட்டரிலேயே அங்கிருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலுள்ள உத்தரப் பிரதேச எல்லைக்கு அம்மாணவன் தப்பியோடினான். ஆனாலும், அவன் விரட்டிப் பிடிக்கப்பட்டான். அப்போதும் அவனிடம் கைத்துப்பாக்கி இருந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

அவனுக்குத் துப்பாக்கி எப்படிக் கிடைத்தது என்றும் காவல்துறை விசாரித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்