நீண்ட காலத்திற்குப் பின் நடைபெற்ற பாஜக கூட்டணி முதல்வர்கள் கூட்டம்

2 mins read
24bc207c-e020-47b3-8e41-c2f8947c1fcb
பாஜக கூட்டணி முதல்வா்கள் கூட்டம் பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது முதல்முறையாக நடத்தப்பட்டு உள்ளது. - படம்: இந்திய ஊடகம்

சண்டிகர்: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வா்கள் கூட்டம் வியாழக்கிழமை (அக்டோபர் 17) நடைபெற்றது.

சண்டிகரில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மகாராஷ்டிரா, ஜாா்க்கண்ட் மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தல் குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது.

இந்தியாவின் 19 மாநிலங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி நடைபெறுகிறது.

கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமா் மோடி, மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா ஆகியோருடன் பாஜகவின் 13 முதல்வர்களும் 16 துணை முதல்வர்களும் பங்கேற்றனர்.

பாஜக கூட்டணிக் கட்சிகளின் ஆட்சி நடைபெறும் ஆந்திரப் பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, சிக்கிம், நாகாலாந்து, மேகாலயா ஆகியவற்றின் முதல்வர்களும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வா் பவன் கல்யாண், மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வா்கள் தேவேந்திர ஃபட்னாவிஸ், அஜித் பவாா் போன்றோர் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

பாஜக கூட்டணி முதல்வா்கள் கூட்டம் பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது முதல்முறையாக நடத்தப்பட்டு உள்ளது.

இதற்கு முன்னர் 2014, 2019 ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தோ்தல்களில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பாஜக, இவ்வாண்டின் மக்களவைத் தோ்தலில் தனிப்பெரும்பான்மை பெறத் தவறியது.

அதனால் கூட்டணி ஆட்சியே அமைக்க முடிந்தது.

அண்மையில் நடைபெற்ற ஹரியானா, ஜம்மு-காஷ்மீா் சட்டப் பேரவைத் தோ்தல்களில், ஹரியானாவில் கடும் சவால்களுக்கு மத்தியில் காங்கிரசை வீழ்த்தி மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைத்தது.

இது மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு ஏற்பட்ட பின்னடைவை சரிக்கட்டுவதாக அமைந்தது.

ஜம்மு-காஷ்மீரில் பாஜகவால் ஆட்சி அமைக்க முடியவில்லை என்றாலும் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

இந்நிலையில் அடுத்து நடைபெற இருக்கும் தேர்தல்களில் தனது செல்வாக்கை அதிகரிக்க பாஜக முயன்று வருகிறது. இது தொடா்பாக முதல்வா்கள் கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்