தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வங்கியில் கொள்ளைப் போன ரூ.13 கோடி மதிப்புள்ள தங்க நகைகள்

1 mins read
17b85721-6eca-4ae3-8452-9e08c223ab3f
கொள்ளையர்களைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் கூறினர். - படம்: இணையம்

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள ‘ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா’ வங்கியில் ரூ.13.6 கோடி மதிப்புள்ள 19 கிலோ தங்க நகைகள் திங்கட்கிழமை பின்னிரவு நேரத்தில் திருடப்பட்டதாக அப்பகுதி காவல்துறையினர் புதன்கிழமை தெரிவித்தனர்.

மேலும், கொள்ளையர்களைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் அருகே ராயபர்த்தியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்தக் கிளையில் வாடிக்கையாளர்கள் தங்கள் நகைகளைப் பாதுகாப்பாக வைக்க மூன்று பெட்டகங்கள் உள்ளன.

இந்நிலையில், திங்கட்கிழமை பின்னிரவு வங்கிக்குள் நுழைந்த கொள்ளையர்கள் எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவியின் இணைப்பையும் கண்காணிப்புக் கருவியின் இணைப்புகளையும் துண்டித்துள்ளனர்.

மேலும் உள்ளே சென்ற அவர்கள் பாதுகாப்புப் பெட்டகத்தை உடைத்து, அதில் வைக்கப்பட்டிருந்த 500 வாடிக்கையாளர்களின் நகைகளையும் 497 பேரின் நகைகளையும் திருடிச் சென்றுள்ளனர். கொள்ளையர்கள் செல்லும் பொழுது கண்காணிப்புக் கருவியில் பதிவாகியிருந்த பதிவுகளையும் எடுத்துச் சென்றதாகக் கூறப்பட்டது.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை காலை விவரமறிந்த பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்