போபால்: மத்தியப் பிரதேசத்தில் இரு வேறு இடங்களில் நடைபெற்ற துர்க்கை சிலைகளைக் கரைக்கும் நிகழ்ச்சிகளில் 10 சிறுவர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
நவராத்திரி விழாவின் இறுதி நாளான விஜயதசமி கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக, துர்க்கை சிலையை நீரில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி, உஜ்ஜைனுக்கு அருகே உள்ள இங்கோரியா நகரிலிருந்து, கரைக்கப்பட வேண்டிய துர்கை சிலைகள் வியாழக்கிழமை (அக்டோபர் 2) டிராக்டரில் எடுத்துச் செல்லப்பட்டன.
அந்த டிராக்டரில் சிறுவர்களும் பயணம் செய்ததாகக் கூறப்பட்டது.
சம்பல் நதியின் மேல் கட்டப்பட்டுள்ள பாலத்தின் மீது அந்த டிராக்டர் நிறுத்தப்பட்டது. அப்போது 12 வயதுச் சிறுவன் திடீரென டிராக்டர் இயந்திரத்தை இயக்கியதால் வாகனம் திடீரென ஓடி, சம்பல் நதிக்குள் விழுந்ததாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவத்தில் சிறுவர்கள் 12 பேர் தண்ணீரில் விழுந்த நிலையில், 11 பேர் மீட்கப்பட்டனர். ஒரு சிறுவனைக் காணவில்லை.
காணாமற்போன சிறுவனைக் காவல்துறையினரும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினரும் தேடி வருகின்றனர்.
மீட்கப்பட்ட சிறுவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, காந்த்வா மாவட்டத்தின் அர்த்லா, ஜம்லி கிராமங்களைச் சேர்ந்த ஏறக்குறைய 30 பேர் துர்கை சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க டிராக்டரில் எடுத்துச் சென்றபோது, அந்த டிராக்டர் அருகில் இருந்த ஏரியில் கவிழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர் சிறுமிகள் எட்டுப் பேர் உட்பட 11 பேரின் சடலங்களை மீட்டனர்.
பாரந்தூக்கி உதவியுடன் டிராக்டரை மீட்ட அவர்கள், காணாமற்போனோரைத் தேடி வருகின்றனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. அதிகச் சுமை காரணமாக அந்த டிராக்டர் கவிழ்ந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இவ்வேளையில், இரு சம்பவங்களிலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில முதல்வர் மோகன் யாதவ் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்களுக்குத் தரமான சிகிச்சை வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.