புதுடெல்லி: தாய்லாந்திலிருந்து இந்தியாவுக்குக் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருளை கடத்தி வந்த குற்றக் கும்பல் ஒன்று நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விநியோகம் செய்து வந்தது.
இது தொடர்பாகக் கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் டெல்லி, குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் காவல்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையில் ரூ.13,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
அந்தக் கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்ட விரேந்திர பசோயா, அவரது மகன் ரிஷப் ஆகியோர் வெளிநாட்டிற்குத் தப்பிச்சென்றனர்.
இருப்பினும், கடத்தல் கும்பல் தொடர்பாக டெல்லி காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய ஆடவர் ஒருவரை அதிகாரிகள் திங்கட்கிழமை (ஜனவரி 19) கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் சிக்கிமைச் சேர்ந்த 40 வயது திலக் பிரசாத் சர்மா என்று தெரிவிக்கப்பட்டது.
திலக் தாய்லாந்திலிருந்து இந்தியாவுக்குக் கஞ்சா கடத்தி வந்து, அதை இந்தியாவின் பிற பகுதிகளுக்கு விநியோகம் செய்ததில் முக்கியப் பங்கு வகித்தார் என்று அதிகாரிகள் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
கைது செய்யப்பட்ட திலக் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

