சிஎஸ்ஆர் நிதி மோசடியில் 1,343 வழக்குகள் பதிவு: பினராயி விஜயன்

2 mins read
1db31ad1-45bb-46e3-89cd-c4d6674d43b4
கேரள முதல்வர் பினராயி விஜயன். - படம்: ஐஏஎன்எஸ்

திருவனந்தபுரம்: கேரளாவில் சிஎஸ்ஆர் நிதியை பயன்படுத்தி பாதி விலையில் ஸ்கூட்டர் தருவதாக கூறி ரூ.281 கோடி மோசடி செய்யப்பட்டது தொடர்பாக 1,343 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளாவின் இடுக்கி பகுதியைச் சேர்ந்த 26 வயது அனந்து கிருஷ்ணன், கடந்த 2022ஆம் ஆண்டில் சமூகப் பொருளாதார, சுற்றுச்சூழல் மேம்பாட்டு சங்கம் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் கூட்டமைப்பைத் தொடங்கினார்.

பல்வேறு தொழில் நிறுவனங்களிடம் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (சிஎஸ்ஆர்) நிதியை பெற்று, பொதுமக்களுக்குப் பாதி விலையில் ஸ்கூட்டர், மடிக்கணினி மற்றும் தையல் இயந்திரம் வழங்குவதாக அவர் உறுதி அளித்தார்.

இதை நம்பிய பொதுமக்கள் பலர் அவரது தன்னார்வ அமைப்புகளில் பணம் செலுத்தி முன்பதிவு செய்தனர். ஆனால் அனைவருக்கும் ஸ்கூட்டர் உள்ளிட்டவற்றை வழங்காமல் பெரும் தொகையை அனந்து கிருஷ்ணன் உள்ளிட்டோர் மோசடி செய்தனர்.

கேரளாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த மோசடி குறித்து மாநில சட்டமன்றத்தில் முதல்வர் பினராயி விஜயன் பேசினார்.

“சிஎஸ்ஆர் நிதியின் பெயரில் நடந்த மோசடி தொடர்பாக மாநிலம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் 1,343 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 655 வழக்குகள் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளன.இதுவரை 386 வழக்குகள் விசாரிக்கப்பட்டதில், பாதி விலையில் ஸ்கூட்டர் தருவதாக 49,386 பேரிடம் ரூ.281.43 கோடி வசூலிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதில் 16,438 பேருக்கு மட்டுமே ஸ்கூட்டர் தரப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு ஸ்கூட்டர் கிடைக்கவில்லை.

“இதுபோல் பாதி விலையில் மடிக்கணினி தருவதாக 36,891 பேரிடம் ரூ.9.22 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால் 29,897 பேருக்கு மட்டுமே மடிக்கணினி தரப்பட்டுள்ளது.

“இந்த மோசடியில் முக்கிய குற்றவாளிகளான சங்கத்தின் செயலாளர் அனந்து கிருஷ்ணன், தலைவர் அனந்த குமார் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 20க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இவர்களின் மூன்று சொத்துகளை முடக்க நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது,” என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்