ரஷ்ய ராணுவத்தில் தவறாகச் சேர்க்கப்பட்ட 139 இந்தியர்கள் மீட்பு

ரஷ்ய ராணுவத்தில் தவறாகச் சேர்க்கப்பட்ட 139 இந்தியர்கள் மீட்பு

2 mins read
a7ecd7c2-db57-470e-b369-a3ff6db5b4ab
ரஷ்ய ராணுவத்திலிருந்து மீட்கப்பட்டோரில் சிலர். - படம்: என்டிடிவி

புதுடெல்லி: இந்தியாவைச் சேர்ந்தோர் ரஷ்ய ராணுவத்தில் மோசடியாகச் சேர்க்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து 139 இந்தியர்களை மீட்டுள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தமது வாராந்தர செய்தியாளர் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 31) இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் ரஷ்ய அதிகாரிகளுடன் இணைந்து இந்திய அதிகாரிகள் தொடர்ந்து பணியாற்றி வருவதாக அவர் கூறினார்.

“வெளியுறவு அமைச்சு மேற்கொண்ட அரசதந்திர முயற்சிகளின் விளைவாக 139 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். ரஷ்ய ராணுவத்தில் உள்ள இன்னும் இருபதுக்கும் மேற்பட்டோரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

“போலியான வேலை உறுதிமொழிகளை நம்பி சட்டவிரோத ஆள்சேர்ப்புக் கும்பல்களிடம் சிக்கிவிட வேண்டாம் என்று மீண்டும் இந்தியக் குடிமக்களை எச்சரிக்கிறோம்.

“நேர்மையற்ற தனிநபர்கள் மற்றும் முகமைகளால் வழங்கப்படும் ஆபத்து நிறைந்த வேலை வாய்ப்புகளை நம்ப வேண்டாம் என்று மீண்டும் தெரிவிக்கிறோம்,” என்றார் ஜெய்ஸ்வால்.

இதற்கிடையே, பொய்யான வாக்குறுதிகளை அளித்து வேலை தேடுபவர்களைக் கவர்ந்திழுக்கும் மோசடி வெளிநாட்டு ஆள்சேர்ப்பு முகவர்களிடம் இந்தியர்கள் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று வெளியுறவு அமைச்சு தனியாக ஓர் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

ரஷ்யாவில் வேலை வாங்கித் தருவதாக இந்தியர்கள் பலரை போலி முகவர்கள் அழைத்துச் சென்று ரஷ்ய ராணுவத்தில் சேர்த்துவிடுவதாகவும் உக்ரேனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவத்தின் சார்பில் அவர்கள் பயன்படுத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து அந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

இந்தியர்கள் மீட்கப்பட்ட விவரத்தை வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அதே நாளில் உச்ச நீதிமன்றம் ஓர் உத்தரவைப் பிறப்பித்தது.

ரஷ்ய ராணுவத்தில் தவறுதலாகச் சேர்க்கப்பட்டோரின் உறவினர்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் நேரடியாக விவரங்களைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் தனித்துவ ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்குமாறு வெளியுறவு அமைச்சுக்கு உத்தரவிட்டது.

குறிப்புச் சொற்கள்
ர‌ஷ்யாராணுவம்ஆள்கடத்தல்