சென்னை: தமிழ்நாட்டில் ரேஷன் அட்டை வைத்துள்ளோரில் 14.31 லட்சம் பேர் தங்கள் கைவிரல் ரேகையைப் பதிவு செய்யவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதனால், இந்த வகை ரேஷன் அட்டைகளின் உறுப்பினர்களிடம் இருந்து கைவிரல் ரேகைப் பதிவு மற்றும் கருவிழிப் பதிவை ரேஷன் கடைப் பணியாளர்கள் மூலம் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.
ஆகஸ்ட் 2ஆம் தேதி மற்றும் 8, 9ஆம் தேதிகளில் கைவிரல் ரேகையைப் பதிவு செய்வதற்காகத் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
அந்த முகாம்களில் 117,985 பேர் தங்கள் கைவிரல் ரேகையை ரேஷன் கடைகளில் சென்று பதிவு செய்துள்ளனர்.
மேலும், இடைப்பட்ட நாள்களில் 22,734 பேர் ரேஷன் கடைகளுக்குச் சென்று தங்கள் கைவிரல் ரேகையைப் பதிவு செய்துள்ளனர்.
அந்த வகையில் 3 கோடியே 43 லட்சத்து 47 ஆயிரத்து 73 பேர் நேற்று வரை கைவிரல் ரேகை பதிவு செய்துள்ளனர். இது 95.96 விழுக்காடு ஆகும்.
இன்னும் 14 லட்சத்து 31 ஆயிரத்து 154 பேர் கைவிரல் ரேகை பதிவு செய்ய வேண்டியதாக உள்ளது.
அவர்களை விரைந்து கைவிரல் ரேகை பதிவு செய்யுமாறு உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் உள்ள முன்னுரிமை ரேஷன் அட்டைகள் மற்றும் ‘அந்தியோதயா அன்னயோ ஜனா’ ரேஷன் அட்டைகளில் இடம் பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதார் விவரங்களையும் உறுதிப்படுத்தும் வகையில் கைவிரல் ரேகை மற்றும் கண் கருவிழிப் பதிவை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது.


