ஹைதராபாத்: பெண் பயணியிடமிருந்து ரூ.14 கோடி மதிப்புள்ள 40 கிலோ கஞ்சா ஹைதராபாத் விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
உளவுத்துறை அதிகாரிகள் கொடுத்த தகவலின்பேரில், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விமான நிலையத்தில் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, பெண் பயணி ஒருவர் இரண்டு பைகளில் கொண்டு வந்த உயர்வகை கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள அப்பெண், தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் அந்த நீரில் வளரும் (ஹைட்ரோபோனிக்) கஞ்சாவை வாங்கிய பின்னர், துபாய் வழியாக இந்தியாவுக்கு அதைக் கடத்தி வந்ததாகத் தெரிவித்தார்.
பேங்காக்கிலிருந்து நேரடியாக வரும் பயணிகள், இந்தியாவில் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அதைத் தவிர்க்கும் பொருட்டு, துபாய் சென்று கஞ்சா கடத்தி வந்ததாக அந்தப் பெண் கூறினார்.
அண்மைக்காலமாக தாய்லாந்திலிருந்து இந்தியாவுக்கு கஞ்சா கடத்தி வருவது அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பிடிபட்ட பெண்மணி முதலில் மும்பையிலிருந்து பேங்காக் சென்றார். பின்னர், பெட்டிகளில் கஞ்சா பொட்டலங்களை அடைத்து பேங்காக்கிலிருந்து துபாய் சென்ற அவர், புதன்கிழமை (ஜூலை 30) அதிகாலை 3.30 மணியளவில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி அனைத்துலக விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.
அதன் பின்னர் மும்பை செல்லவிருந்ததாகவும் அதற்கான உத்தரவுக்காக தாம் காத்திருந்ததாகவும் அந்தப் பெண் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த சில மாதங்களில் மட்டும் பேங்காக்கிலிருந்து ஹைதராபாத்துக்கு கஞ்சா கடத்தி வந்த 12 பேர் கைதாகியுள்ளனர்.