சத்தீஸ்கரில் கொல்லப்பட்ட 14 மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்கள்

2 mins read
57ba4ec8-dc5f-427c-95dc-fbe5913805a0
மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்களில் 12 பேர் சுக்மாவிலும் இருவர் பிஜாபூரிலும் சுட்டுக் கொல்லப்பட்டனர். - படம்: என்டிடிவி

பிஜாபூர்: இந்தியப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் மேற்கொண்ட இரண்டு வெவ்வேறு துப்பாக்கிச்சூட்டில் 14 மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா வட்டாரத்திலும் அண்டை வட்டாரமான பிஜாபூரிலும் இரண்டு துப்பாக்கிச்சூடு உத்தரவுகளை அதிகாரிகள் நிறைவேற்றினர்.

14 மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்களில் 12 பேர் சுக்மாவிலும் இருவர் பிஜாபூரிலும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

எனினும் பாதுகாப்புப் படை அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளைத் தொடர்வதால் சுடப்படும் கிளர்ச்சியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுக்மா வட்டாரத்தில் உள்ள கிஸ்டாரம் வட்டாரத்தில் அதிகாரிகள் முதல் துப்பாக்கிச்சூட்டை நடத்தினர். குறிப்பிட்ட புலனாய்வுத் தகவலின்படி அதிகாரிகள் அங்குள்ள வனப்பகுதியில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

சோதனை நடவடிக்கையின்போது மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதற்குப் பதிலடியாக அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூத்த மாவோயிஸ்ட் தலைவர் சச்சின் மங்டு கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கூடுதல் காவல்துறை ஆணையம் ஆகா‌ஷ் கிர்பூஞ்சேவைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற மாவோயிஸ்ட் தளபதியையும் அதிகாரிகள் சுட்டுக்கொன்றதாகத் தகவல்கள் கூறுகின்றன.

அதிகாரிகள் தாக்குதல் நடத்தியபோது மாவோயிஸ்ட் குழுவின் மத்தியக் குழு உறுப்பினர்களிடையே உயர்மட்ட கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்ததாகவும் பல்வேறு தகவல்கள் குறிப்பிட்டன.

வனப்பகுதியிலிருந்து அதிகாரிகள் திரும்பியவுடன் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்களின் அதிகாரபூர்வ அடையாளங்கள் உறுதிப்படுத்தப்படும் என்று சுக்மா காவல்துறை ஆணையம் கிரன் சவான் தெரிவித்தார்.

துப்பாக்கிச்சூடு நடத்திய இடத்திலிருந்து பாதுகாப்புப் படை அதிகாரிகள் ஏகே 47 ரக துப்பாக்கிகளையும் இன்ஸாஸ் ரக துப்பாக்கிகளையும் கைப்பற்றினர்.

மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்களுக்கும் பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்கும் இடையே இவ்வாண்டு நடந்த முதல் துப்பாக்கித் தாக்குதல் இது.

குறிப்புச் சொற்கள்