இண்டியா கூட்டணி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் 14 குறைபாடுகள்

இண்டியா கூட்டணி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் 14 குறைபாடுகள்

கோப்புப் படம்: சுப்ரீம் கோர்ட் அப்சர்வர்

13 Oct 2026 - 4:59 pm

1 mins read

புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட ‘இண்டியா’ கூட்டணித் தலைவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் 14 பிழைகள் இருப்பதாக உச்ச நீதிமன்றப் பதிவாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் மனுவுக்கான நீதிமன்றக் கட்டணத்தில் ரூ.220 குறைவாகச் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட வழக்கறிஞரின் முறையான கையொப்பம் இல்லாமை, தேவையான ஆதரவு ஆவணங்களை இணைக்காதது ஆகியவை முதன்மைக் குறைபாடுகளாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

அரசியலமைப்பின் 32வது பிரிவின்கீழ் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோரைத் தனிப்பட்ட முறையில் எதிர்மனுதாரர்களாகச் சேர்த்ததற்கான சரியான காரணத்தையும் விளக்குமாறு பதிவாளர் அலுவலகம் கோரியுள்ளது.

மேலும், மனுதாரர்களில் ஒருவரான காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் தெளிவான அடையாளச் சான்றையும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுட்டிக்காட்டப்பட்டுள்ள பிழைகள் காரணமாக சற்றுத் தாமதமாகும் எனக் கூறப்படுகிறது.

சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து திருத்தப்பட்ட மனுவைத் தாக்கல் செய்த பின்னரே, அம்மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்