செயல்பாட்டில் இல்லாத 15.36 கோடி ‘ஜன் தன்’ வங்கிக் கணக்குகள்

செயல்பாட்டில் இல்லாத 15.36 கோடி ‘ஜன் தன்’ வங்கிக் கணக்குகள்

2 mins read
a060da64-1e38-4aff-b1eb-0cad0b6b3050
நாடு முழுவதும் இதுவரை 59.03 கோடிக்கும் அதிகமான ‘ஜன் தன்’ கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. - கோப்புப் படம்: ஃபை. மனி
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ‘ஜன் தன்’ வங்கிக் கணக்குத் திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்ட நான்கில் ஒரு வங்கிக் கணக்கு எவ்விதப் பயன்பாடும் இன்றி முடங்கியிருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு வங்கிச் சேவையை எளிதாகக் கொண்டு சேர்க்கும் நோக்கில் 2014ல் இத்திட்டம் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், ‘ஜன் தன்’ வங்கிக் கணக்கு குறித்து சில தகவல்களை அளிக்கக் கோரி சமூகச் செயல்பாட்டாளர் சந்திரசேகர் கௌர் தாக்கல் செய்த மனுவுக்கு இந்திய நிதியமைச்சகம் பதில் அளித்துள்ளது.

அதில், நாடு முழுவதும் இதுவரை 59.03 கோடிக்கும் அதிகமான ‘ஜன் தன்’ கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கணக்குகளில் மொத்தம் ரூ.3.15 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி இருப்பு உள்ளது என்றும் அதில் 32.89 கோடி கணக்குகள் பெண்களாலும் 26.14 கோடி கணக்குகள் ஆண்களாலும் தொடங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், இத்திட்டத்தில் 15.36 கோடி வங்கிக் கணக்குகள் எவ்விதப் பணப்பரிவர்த்தனையும் இன்றி ‘செயல்படாத கணக்குகளாக’ (Inoperative) மாறியுள்ளன. மேலும், 5.72 கோடி கணக்குகளில் எவ்விதத் தொகையும் இன்றி பூஜ்ய இருப்பு நிலவுகிறது.

மாநில அளவில் உத்தரப் பிரதேசம் 95.92 லட்சம் பூஜ்ய இருப்பு கணக்குகளுடனும் 3.23 கோடி செயல்படாத கணக்குகளுடனும் முதலிடத்தில் உள்ளது. பீகார், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இக்கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் விபத்துக் காப்பீட்டுடன் கூடிய 41.29 கோடிக்கும் அதிகமான ‘ரூபே’ அட்டைகளும் ரூ.10,000 வரை மிகைப்பற்று வசதியும் (Overdraft) வழங்கப்பட்டுள்ளன.

ஏழை எளிய மக்களுக்கு நிதிப் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு பல்வேறு சலுகைகளை வழங்கிய போதிலும், பெருமளவிலான கணக்குகள் பயன்பாடின்றி முடங்கிக்கிடப்பது தெரியவந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
பிரதமர்நரேந்திர மோடிவங்கிகணக்குகள்