புதுடெல்லி: அண்மைய விபத்தை அடுத்து, ஏர் இந்தியா நிறுவனம், தனது அனைத்துலக விமானச் சேவையில் ஈடுபடுத்தியுள்ள 15 விழுக்காடு விமானங்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகத் தெரிவித்தது.
இது தொடர்பான அறிவிப்பை அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி காம்ப்பெல் வில்சன் வெளியிட்டார்.
இதனால் ஏர் இந்தியா விமானங்களில் வெளிநாடு செல்ல முன்பதிவு செய்த பயணிகள் கவலை அடைந்துள்ளனர்.
இந்த விபத்தை அடுத்து, ஏர் இந்தியா பயன்படுத்தும் ‘போயிங் 787-டிரீம்லைனர்’ விமானங்களில் பாதுகாப்புச் சோதனை நடத்துமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், விபத்துக்குள்ளான விமானம், நன்கு பராமரிக்கப்பட்டு வந்ததாகவும் கடந்த 2023ஆம் ஆண்டுதான் அந்த விமானத்தில் சோதனை நடத்தப்பட்டு, அதன் வலதுபுற இன்ஜின் மாற்றப்பட்டதாகவும் காம்ப்பெல் வில்சன் தெரிவித்துள்ளார்.
“விபத்துக்குள்ளான விமானம், புறப்படுவதற்கு முன்பு, அதில் எந்தப் பிரச்சினையும் கண்டறியப்படவில்லை.
“விமானத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்க, போயிங் 787 மற்றும் போயிங் 777 விமானங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேற்கொள்ளப் போகிறோம். இதற்கு அதிக நேரம் தேவைப்படும்.
“எனவே, விமானப் புறப்பாடுகளில் மாற்றம் ஏற்படும் என்பதால் எங்களது 15% அனைத்துலக விமானங்களின் செயல்பாட்டை ஜூன் 20 முதல் ஜூலை பாதி வரை நிறுத்தி வைக்கிறோம்,” என்று காம்ப்பெல் வில்சன் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இந்த நடவடிக்கை மூலம் எதிர்பாராத பிரச்சினை ஏற்படும்போது, அதைச் சரியாகக் கையாள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜூன் 12ஆம் தேதி அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், ஓரிரு நிமிடங்களில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
இதையடுத்து, விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஏர் இந்தியா பயன்படுத்தும் அனைத்து போயிங் ரக விமானங்களையும் பாதுகாப்பு ஆய்வுக்கு உட்படுத்த அறிவுறுத்தியது.
இந்நிலையில், ஏர் இந்தியாவின் பல விமானச் சேவைகள் விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு உள்ளிட்ட சில காரணங்களால் ரத்தாகின.