இந்தியாவின் மகாராஷ்டிர, கர்நாடக மாநிலங்களில் என்ஐஏ சோதனை; 13 பேர் கைது

1 mins read
263c7c80-3edf-4cb2-b0fb-366b2ad5cbe4
ஐஎஸ் அமைப்புக்கு எதிராக என்ஐஏ அதிகாரிகள் மகாராஷ்டிர, கர்நாடக மாநிலங்களில் அதிகாலையில் சோதனை நடத்தினர். - படம்:தமிழ்முரசு கோப்புப் படம்

புதுடெல்லி: தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக தேசிய புலனாய்வுப் பிரிவு (என்ஐஏ), இந்தியாவின் மகாராஷ்டிர, கர்நாடக மாநிலங்களில் சனிக்கிழமை (டிசம்பர் 9) அதிகாலையிலேயே அதிரடிச் சோதனை நடத்தத் தொடங்கியது.

மகாராஷ்டிராவில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது. புனே நகர், தாணே கிராமப் பகுதிகள், நகர்ப்புறங்கள், மீரா பயாண்டர் போன்ற வட்டாரத்திலும் ஐஎஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் 13 பேர் கைதாகினர்.

மகாராஷ்டிராவில் திருட்டுக் குற்றத்துக்காக கைதான இருவர், ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பானவர்கள் என்று அறியப்பட்டவுடன், அம்மாநில தீவிரவாத எதிர்ப்புப் பிரிவுக்கு விசாரணை மாற்றப்பட்டது.

அதன் பிறகே, அதிகாலையில் அதிரடிச் சோதனை நடவடிக்கைகளில் என்ஐஏ இறங்கியது. கர்நாடகாவில் ஓர் இடத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது என்றும் தெரிகிறது.

கைதானவர்கள் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதக் குழுவின் கோட்பாடுகளை இந்தியாவில் பரப்ப முயன்று வருவதாக என்ஐஏ குற்றஞ்சாட்டி உள்ளது.

மேலும், அவர்கள் வெடிப்பொருள்களைத் தயாரிப்பதிலும் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

நாட்டில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடவிருந்ததால் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்