புதுடெல்லி: இந்தியா முழுவதும் அந்நாட்டின் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியால் ஏறக்குறைய 14 முதல் 15 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி குற்றஞ்சாட்டி உள்ளார்.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையத்தால்கூட செய்ய முடியாத சாதனையைத் தேர்தல் ஆணையம் செய்து முடித்திருப்பதாகச் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் ஏறக்குறைய 15 விழுக்காட்டினரை இந்தத் திருத்தப் பணியின்மூலம் தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கண்டறிவதே இந்தச் செயலின் முதன்மை நோக்கம் எனக் கூறப்பட்ட நிலையில், இதுவரை எத்தனை பேரைக் கண்டறிந்துள்ளனர் என்ற விவரத்தை ஆணையம் ஏன் வெளியிடவில்லை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தகுதியான குடிமக்களின் வாக்களிக்கும் உரிமை அரசியல் சாசனப் பிரிவு 326ன்படி அடிப்படை உரிமையாகும் என்றும் அதை நடைமுறைச் சிக்கல்களைக் காரணம் காட்டி பறிப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் திரு குரேஷி தமது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்துவதாகக் கூறி தகுதியான பலரின் பெயர்கள் தன்னிச்சையாக நீக்கப்பட்டு வருவதாக இந்திய எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், அந்நாட்டின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரின் இந்த அறிக்கை புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.


