குவாலியர்: மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் அருகே கோவில் அமைந்துள்ள பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த லாரி புகுந்து பக்தர்கள்மீது மோதிய கோர விபத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 29 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை (அக்டோபர் 17) நள்ளிரவு ஏறக்குறைய ஒரு மணியளவில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்ததாகக் குவாலியர் காவல்துறை கண்காணிப்பாளர் தரம்வீர் சிங் தெரிவித்தார். இத்தகவலை அம்மாவட்ட ஆட்சியர் ருச்சிகா சௌஹான் உறுதி செய்துள்ளார்.
குவாலியரில் உள்ள புகழ்பெற்ற சீட்லா மாதா கோவில் நள்ளிரவில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யக் குவிந்திருந்தனர். அப்போது, சின்னோர் பகுதியிலிருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று, கனரக வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்ட செங்குத்தான சரிவுப் பாதையில் வேகமாக வந்துள்ளது.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி, பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த காவல்துறையின் தடுப்புகளை உடைத்துக் கொண்டு சாலையில் நின்றிருந்த பக்தர்கள்மீது அதிவேகமாக மோதியது.
தொடர்ந்து கட்டுப்பாடின்றிச் சென்ற லாரி, கோவிலின் வெளிப்புறச் சுவர் (நுழைவாயில்) மீது மோதி நின்றது. இந்த விபத்தில் லாரியின் அடியில் சிக்கி 15 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு காவலர்கள் உட்பட 29 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் 5 முதல் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு காவல்துறை தடுப்புகள், சோதனைச் சாவடி அமைக்கப்பட்டிருந்த நிலையில், கனரக வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்ட பாதையில் லாரி எவ்வாறு நுழைந்தது என்பது குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
