ராஜ்கோட்: ஒன்பதாம் வகுப்பில் பயின்றுவந்த மாணவி ஒருவர் பள்ளித் தேர்வுக்கூடத்திற்குள் நுழைந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இச்சம்பவம் இந்தியாவின் குஜராத் மாநிலம், அம்ரேலி நகரில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்தது.
ராஜ்கோட் மாவட்டம், ஜஸ்தன் நகரைச் சேர்ந்த சாக்ஷி ரஜோசரா, 15, என்ற அம்மாணவி சாந்தாபா கஜேரா பள்ளியில் படித்து வந்தார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று தேர்வுக்கூடத்திற்குச் சென்றபோது திடீரென அவர் மயங்கிச் சரிந்தார்.
சுயநினைவை இழந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். ஆயினும், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறி, மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர்.
சாக்ஷியின் இறப்பிற்கான காரணத்தை அறிய அவரது உடல் உடற்கூறாய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக குஜராத்தில், குறிப்பாக ராஜ்கோட்டில் இளையர்கள் பலர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

