கோழிக்கோடு: இந்தியாவின் கேரள மாநிலம், கோழிக்கோடு ரயில் நிலையத்தில் மணிக்கூண்டு ஒன்று வியாழக்கிழமை (ஜூலை 9) காலை இரண்டாவது தளமேடையில் இடிந்து விழுந்தது.
காலை 11.10 மணியளவில், கோழிக்கோடு - கண்ணூர் பயணிகள் ரயில் அந்தத் தளமேடையை ஒட்டியிருக்கும் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தபோது இவ்விபத்து நேர்ந்தது.
அப்பகுதியில் ரயில்வே ஊழியர்கள் பணியில் இருந்தபோதிலும், மணிக்கூண்டு இடிந்து விழுவதற்குள் அவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு விரைந்தனர்.
மணிக்கூண்டு இடிந்து விழுந்தது குண்டுவெடித்ததுபோல் இருந்ததாகக் கூறப்பட்டது. நல்ல வேளையாக அந்த நேரத்தில் பயணிகள் யாரும் அவ்விடத்திற்கு அருகில் இல்லாததால் ஒரு பெருவிபத்து தவிர்க்கப்பட்டது.
முதற்கட்ட அறிக்கைகளின்படி, கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் பழைமையான அந்த மணிக்கூண்டின் மோசமான நிலை குறித்து அதிகாரிகள் முன்னரே எச்சரித்திருந்தனர் என்று மாத்ருபூமி ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
கோழிக்கோட்டில் கடந்த சில நாள்களாகக் கடுமையான மழை பெய்து வந்தது. அதனையடுத்து, முன்னெச்சரிக்கைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த வேளையிலேயே மணிக்கூண்டு இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மணிக்கூண்டின் எஞ்சிய பகுதியும் இடிந்து விழக்கூடும் என்ற அச்சம் நிலவுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பகுதிக்குள் யாரும் செல்ல முடியாதபடி தடுப்புகள் போடப்பட்டுள்ளன.

