சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி மருமகனுக்கு 158 வகையான உணவு வகைகளுடன் விருந்தளித்து அசரவைத்த ஆந்திராவைச் சேர்ந்த பெண் குடும்பத்தாருக்குப் பாராட்டுகள் குவிகின்றன.
அந்த விருந்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் காணொளிகளும் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையைப் போல் ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
அங்குள்ள கோதாவரி, குண்டூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பொங்கல் சமயத்தில் மாமியார் வீட்டுக்கு வரும் புது மருமகன்களுக்கு தடபுடலாக விருந்து வைப்பது பாரம்பரியமாக உள்ளது.
அந்த வகையில், குண்டூர் மாவட்டம் தெனாலியைச் சேர்ந்த மௌனிகா என்ற பெண்ணைக் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்ட ஸ்ரீதத்தா, தலைப்பொங்கலுக்காக மாமியார் வீட்டுக்குச் சென்றிருந்தார்.
இதனால் உற்சாகம் அடைந்த பெண் வீட்டார் மருமனுக்காக இனிப்பு, காரம் எனப் பல்வேறு வகையான உணவு வகைகளைச் சமைத்து வைத்து அசத்திவிட்டனர்.
அதன்பின்னர் மருமகனுக்கு மாமனார் பாசத்துடன் சோறு ஊட்டியது, மாமியார் உள்ளிட்டோர் உணவு வகைகளைப் பரிமாறியது உள்ளிட்ட காட்சிகளைக் கொண்ட காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

