நெடும்பசேரி: இந்தியாவிற்கு கொக்கைன் போதைப்பொருள் கடத்திவந்த பிரேசிலைச் சேர்ந்த கணவனும் மனைவியும் கைதுசெய்யப்பட்டனர்.
கேரள மாநிலத்தின் கொச்சி விமான நிலையத்தில் இருவரும் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து 163 கொக்கைன் மாத்திரைகளை வருவாய்ப் புலனாய்வுத் துறையினர் கைப்பற்றினர்.
லூக்கஸ் பட்டிஸ்டா - புரூனா கேப்ரியல் என்ற அவ்விணையர், துபாய் வழியாக கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 11) எமிரேட்ஸ் விமானம் மூலம் கொச்சியைச் சென்றடைந்தனர். அவர்கள் அந்த கொக்கைன் மாத்திரைகளை விழுங்கியிருந்தனர்.
கைதான புரூனா கர்ப்பிணி என்றும் கூறப்பட்டது.
அவர்களிடம் மொத்தம் 1,670 கிராம் கொக்கைன் இருந்தது என்றும் அவற்றின் மதிப்பு ரூ.16 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டது.
கொக்கைன் கடத்தி வரப்படுவதாக வருவாய்ப் புலனாய்வுத் துறையினர்க்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
மாத்திரை வடிவில் கொக்கைன் கடத்தப்படுவது மிகவும் ஆபத்தானது என்றும் அதனை விழுங்கும்போது உடைந்துவிட்டால் அது உயிருக்கே உலைவைத்துவிடும் என்றும் சொல்லப்படுகிறது.
சந்தேகப் பேர்வழிகளான கணவனும் மனைவியும் அங்கமாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு பழங்களும் காய்கறிகளும் அடங்கிய உணவு கொடுக்கப்பட்டு, கொக்கைன் மாத்திரைகள் அனைத்தும் வெளியில் எடுக்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
அவர்களின் வயிற்றில் மேலும் போதை மாத்திரைகள் இல்லை என்பது ஊடுகதிர்ப் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. பின்னர் அவ்விருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். நீதிமன்றம் அவர்களைக் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.