லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏறக்குறைய 16 மணி நேரமாகத் தண்ணீர்த் தொட்டியின் உச்சியில் சிக்கித் தவித்த சிறுவர் இருவரை இந்திய விமானப்படையினர் ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பாக மீட்டனர்.
கோரக்பூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் அந்தச் சிறுவர்கள் அங்குள்ள உயரமான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின்மீது விளையாடுவதற்காக ஏறினர்.
அவர்கள் மேலே சென்ற சிறிது நேரத்தில், தொட்டியின் இரும்பு ஏணி திடீரென உடைந்து கீழே விழுந்தது. இதனால் கீழே இறங்க வழியில்லாமல், அந்தச் சிறுவர்கள் ஏறத்தாழ 100 அடி உயரத்தில் தவித்தனர்.
தகவலறிந்து வந்த உள்ளூர்க் காவல்துறையினரும் மீட்புக் குழுவினரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.
இருப்பினும், ஏணி இல்லாததாலும் தொட்டியின் அமைப்பு காரணமாகவும் சிறுவர்களை மீட்பதில் சிக்கல் நீடித்தது.
விடிய விடியச் சிறுவர்கள் அங்கேயே அச்சத்துடன் தங்கியிருந்தனர்.
இதையடுத்து, மாநில அரசின் அவசரக் கோரிக்கையை ஏற்று இந்திய விமானப்படை மீட்புப் பணியில் இறங்கியது.
ஞாயிற்றுக்கிழமை (மே 3) அதிகாலை 5:20 மணியளவில், விமானப்படையின் ‘எம்ஐ-17 வி5’ வகை ஹெலிகாப்டர் சம்பவ இடத்திற்கு விரைந்தது.
தொடர்புடைய செய்திகள்
அந்தரத்தில் நின்றபடி ஹெலிகாப்டரில் இருந்து வீரர்கள் கயிறு மூலம் இறங்கி, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சிறுவர்கள் இருவரையும் பாதுகாப்பாக மீட்டனர்.
16 மணி நேரப் போராட்டத்திற்குப்பின் மீட்கப்பட்ட சிறுவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தற்போது அவர்கள் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

