சென்னை: சென்னை கொளத்தூர், விவேகானந்தன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ராஜ்குமார். இவர் ஆட்டோமொபைல் கடை நடத்தி வருகிறார். கடந்த 16ஆம் தேதி இவருக்குத் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் எதிர்முனையில் பேசியவர், புதுடெல்லி இணையக் குற்றத்தடுப்பு தலைமையகத்திலிருந்து பேசுகிறோம். உங்கள் மீது போதைப்பொருள் கடத்தல் தொடர்பாகப் புகார் வந்துள்ளது. எனவே, நீங்கள் உடனடியாக டெல்லிக்கு வர வேண்டும். அதுவரை உங்களை மின்னியல் ரீதியாகக் கைது செய்துள்ளோம் என்றார்.
இதனைக்கேட்ட ராஜ்குமார் அதிர்ச்சியடைந்தார். மேலும், உங்கள் மீது தவறு இல்லை என்றால் அதை நிரூபிக்க உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணம் முழுவதையும் நாங்கள் கூறும் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வையுங்கள் என மிரட்டினார். இல்லை என்றால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதனால் பயந்துபோன ராஜ்குமார், தனது வங்கிக் கணக்கிலிருந்த ரூ.16 லட்சத்து 50 ஆயிரத்தை அந்த ஆள் தெரிவித்த வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைத்தார். அதன்பின்னர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜ்குமார் சென்னை மேற்கு மண்டல இணையத் தடுப்புக் காவல்துறையில் புகார் தெரிவித்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில், காவல்துறை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து மோசடிக் கும்பலுக்கு உடந்தையாக இருந்த தூத்துக்குடி மாவட்டம், மகிழ்ச்சிபுரம் சிதம்பரம் நகரைச் சேர்ந்த ஆனந்த குமார், 43 என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனந்த குமாரிடம் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், அவர், இணையக் குற்றவாளிகளுடன் தொடர்பு வைத்து, மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. மேலும் அவர், 25 வங்கி கணக்குகளைத் தொடங்கி, ஏமாற்றப்பட்டவர்களிடம் இருந்து, 60 லட்சம் ரூபாயை வாங்கி கொடுத்து, 3 விழுக்காடு தரகுத் தொகையை, இணையக் குற்றவாளிகளிடம் இருந்து பெற்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க, இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.