தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

16 மாவோயிஸ்டுகள் கொன்று ஒழிப்பு

2 mins read
96ad4780-26fa-46ed-9e26-9dc1986c6736
இரவுநேர துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இருவர் காயமடைந்தனர். - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் இரவு நேரத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் 16 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பாதுகாப்புப் படை வீரர்களில் இருவர் காயமடைந்தனர்.

அந்த மாநிலத்தில் சுக்மா மாவட்டத்தில் ஏராளமான மாவோயிஸ்ட் இயக்கத்தினர் பதுங்கி இருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை (மார்ச் 28) இரவு வேளையில் அந்தப் பகுதியில் மத்திய ஆயுதப் படைக் காவற்படையும் மாவட்ட ஆயுதப் படையும் இணைந்து தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.

அப்போது, ஆயுதப் படை வீரர்கள் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர்.

பதிலுக்கு ஆயுதப் படை வீரர்கள் சுட்டதில் மாவோயிஸ்டுகள் பலர் சுருண்டு விழுந்தனர்.

சனிக்கிழமை காலை வரை மாவோயிஸ்டுகளின் 16 சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் சண்டை தொடர்வதாகவும் அதிகாரிகள் கூறினர்.

காயமடைந்த பாதுகாப்புப் படை வீரர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.

அந்தச் சம்பவத்தை உறுதி செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாவோயிஸ்டுகள் எனப்படும் நக்சலைட்டுகளைத் துடைத்தொழிக்கும் பணியில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

2026 மார்ச் மாதத்திற்குள் நக்சலைட்டுகளை முற்றாக ஒழிக்கும் திட்டத்தை மத்திய அரசு தீட்டியுள்ளதாக தமது எக்ஸ் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

ஆயுதங்களால் பிரச்சினைக்குத் தீர்வு காண இயலாது என்றும் அமைதிப் பேச்சுவார்த்தையே பலனளிக்கும் என்றும் அவர் அதில் கூறியுள்ளார்.

பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் 31 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இருவரும் அப்போது உயிரிழந்தனர்.

சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் அமைந்துள்ள சுக்மா, நாட்டிலேயே நக்சல்களால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்