புதுடெல்லி: உலகின் ஆக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டில் ஏறிய ஆக இளைய இந்தியர் என்ற சாதனை படைத்துள்ளார் காம்யா கார்த்திகேயன் எனும் 16 வயதுச் சிறுமி.
எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய இரண்டாவது ஆக இளைய பெண் என்ற பெருமையையும் அவர் தேடிக்கொண்டார்.
காம்யாவுடன் அவரின் தந்தையார் எஸ். கார்த்திகேயனும் 8,849 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்ட்டில் ஏறினார்.
இந்தியக் கடற்படையில் பணிபுரியும் கார்த்திகேயன், தம் மகளுடன் இம்மாதம் 20ஆம் தேதி எவரெஸ்ட்டில் கால்பதித்தார்.
இச்சாதனைக்காக காம்யாவிற்கு இந்தியக் கடற்படை வாழ்த்து தெரிவித்துள்ளது.
“ஏழில் ஆறு கண்டங்களில் உள்ள ஆக உயர்ந்த சிகரங்களில் ஏறி, மிகுந்த மனவலிமையையும் துணிச்சலையும் வெளிப்படுத்தியுள்ளார் காம்யா. ஏழு கண்டங்களிலும் உள்ள உயர்ந்த சிகரங்களைத் தொட வேண்டும் என்ற காம்யாவின் குறிக்கோள் ஈடேற இந்தியக் கடற்படை வாழ்த்துகிறது,” என்று தனது ‘எக்ஸ்’ ஊடகப் பக்கத்தில் இந்தியக் கடற்படை பதிவிட்டுள்ளது.
அடுத்ததாக, இவ்வாண்டு டிசம்பர் மாதம் அண்டார்டிக்கா கண்டத்திலுள்ள வின்சன் மேசிஃப் சிகரத்தில் ஏறுவது காம்யாவின் இலக்கு.
அம்முயற்சியும் வெற்றிகரமாக ஈடேறினால், ஏழு கண்டங்களின் மிக உயரமான சிகரங்களில் ஏறிய ஆக இளைய பெண் என்ற சாதனையைக் காம்யா படைப்பார்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த 2020 பிப்ரவரியில் தமது ‘மனத்தின் குரல்’ உரையின்போது, “இளம் காம்யா கார்த்திகேயன் எல்லாருக்கும் முன்மாதிரியாகத் திகழ்கிறார்,” என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியிருந்தார்.
அதன்பின் 2021 ஜனவரி மாதம் காணொளி வழியாகக் காம்யாவுடன் உரையாடினார் மோடி.
தேசிய குழந்தைகள் விருதை வென்றுள்ள காம்யா, தற்போது மும்பைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
இதற்கிடையே எவரெஸ்ட் சிகரத்தை நெருங்கிய சமயத்தில் நேப்பாளி, கென்ய மலையேறிகள் உயிரிழந்தனர் என்று மே 23ஆம் தேதி நேப்பாள சுற்றுலாத் துறை தெரிவித்தனர்.
இப்பருவத்தில் எவரெஸ்ட் சிகரத்தைத் தொடும் முயற்சியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இவர்களுடன் சேர்ந்து நான்கு ஆகியுள்ளது.
மூன்று பேர் காணவில்லை என்றும் சுற்றுலாத் துறையின் ஊழியரான கிம் லால் கௌதம் தெரிவித்தார்.
மூவரையும் தேடி மீட்பதற்காக 8,849 மீட்டர் உயரத்தில் குழு ஒன்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.

