இந்தியா-இஸ்ரேல் இடையே கையெழுத்தான 17 ஒப்பந்தங்கள்

இந்தியா-இஸ்ரேல் இடையே கையெழுத்தான 17 ஒப்பந்தங்கள்

2 mins read
5dc2be6f-ac6f-4bd7-89b5-ecd9457ae232
இரு நாடுகளைச் சேர்ந்த குடிமக்களின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் வரலாற்று முடிவு எடுக்கப்பட்டதாக திரு மோடி தெரிவித்துள்ளார். - படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்

புதுடெல்லி: அரசுமுறைப் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் மோடி முன்னிலையில், இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகள் சார்ந்த 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

செயற்கை நுண்ணறிவு, கல்வி, உற்பத்தி, விவசாயம், மின்னணு, கடல்சார் பாரம்பரியம் எனப் பல்வேறு துறைகளில் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார் பிரதமர் மோடி. இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் நகர விமான நிலையத்தில் திரு மோடி தரையிறங்கியது உடனே இரு தலைவர்களும் முதற்கட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இரு தலைவர்களும் செய்தியாளர்களைக் கூட்டாகச் சந்தித்தனர்.

அப்போது, இருதரப்புக்கும் இடையே ஏற்கெனவே பாதுகாப்பு சார்ந்த பங்களிப்பு வலுவாக இருப்பதை இருவரும் ஏற்றுக்கொண்டனர்.

இந்தப் பங்களிப்பை மேலும் விரிவாக்கம் செய்ய இருநாடுகளும் உறுதிபூண்டுள்ளன என்றும் இதன் அடிப்படையில் ராணுவத் தளவாடங்களின் கூட்டுத்தயாரிப்பு, பாதுகாப்பு மேம்பாடு சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்மதித்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான நிரூபிக்கப்பட்ட பங்களிப்பை உயர்த்திட ‘சிறப்பு உத்திபூர்வ பங்களிப்பு’ எனும் வரலாற்று முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக பிரதமர் மோடி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இஸ்ரேலின் ‘ஹீப்ரு’ மொழியில் அவர் இந்தப் பதிவை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

“இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு, ஆழமான நம்பிக்கை என்ற அடித்தளத்தின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு சோதனைக் காலங்களிலும் இந்த உறவு நிலைத்து நிற்கும்.

“அத்தகைய உறவுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் இரு நாடுகளின் உறவை சிறப்பு ஒத்துழைப்பு என்ற கட்டத்திற்கு உயர்த்தும் வரலாற்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

“இம்முடிவானது இரு நாடுகளைச் சேர்ந்த குடிமக்களின் கனவுகளை நிறைவேற்றும்,” என்று திரு மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா-இஸ்ரேல் இடையே முக்கியமான, வளரும் தொழில்நுட்பங்களுக்கான பங்களிப்பு உருவாக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, இதன்மூலம் செயற்கை நுண்ணறிவு, குவாண்டம், முக்கியத் தாதுக்கள் ஆகிய துறைகளில் இந்தியாவும் இஸ்ரேலும் ஒத்துழைக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

இருதரப்புக்கும் இடையே தடையற்ற ஒப்பந்தம் தொடர்பாக, ஆக்கபூர்வமான முறையில் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

பொருளியலின் பல்வேறு பிரிவுகளிலும் உத்திபூர்வத் துறைகளிலும் கூடுதல் ஒத்துழைப்பு, கூட்டுப்பங்களிப்பு வழங்குவதை அடிப்படையாகக் கொண்டு, தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் முன்மொழியப்பட்டதாக இருநாடுகளும் கூறியுள்ளன.

இதனிடையே, பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, அமெரிக்கா முன்மொழிந்த காஸா அமைதி ஒப்பந்தத்திற்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும் என்றார்.

“இது நம்பிக்கை இழப்பதற்கான நேரமல்ல. வளர்த்தெடுப்பதற்கான நேரம்,” என்றார் திரு மிஸ்ரி.

குறிப்புச் சொற்கள்
பிரதமர்மோடிஇஸ்‌ரேல்ஒப்பந்தம்