பிரம்மோஸ் ஏவுகணையை வாங்க 17 நாடுகள் விருப்பம்

3 mins read
17d081ca-d8c0-4e19-ba00-ed6fb6b153cb
ஆற்றல்மிக்க பிரம்மோஸ் ஏவுகணைகள். - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க 17க்கும் மேற்பட்ட நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.

இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து சூப்பர்சானிக் ஏவுகணைகளை தயாரிக்க கடந்த 1998ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தன.

இந்தியாவின் பிரம்மபுத்திரா நதி (Brahmaputra), ரஷ்யாவின் மோஸ்க்வா (Moskva) நதிகளின் பெயர்களில் இருந்து புதிய சூப்பர்சானிக் ஏவுகணைக்கு பிரம்மோஸ் (BrahMos) என்று பெயரிடப்பட்டது.

படைப்பின் கடவுளான பிரம்மனின் வலிமைமிக்க ஆயுதமான பிரம்மாஸ்திரத்தை முன்னிறுத்தியும் இந்தப் பெயர் தேர்வு செய்யப்பட்டது.

நீர், நிலம், வான் பரப்பில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை ஏவ முடியும். கடந்த 2005ஆம் ஆண்டில் கடற்படை, 2007ஆம் ஆண்டில் ராணுவம், 2020ஆம் ஆண்டில் விமானப்படையில் பிரம்மோஸ் சேர்க்கப்பட்டது. 28 அடி நீளம், 2 அடி விட்டம், 3,000 கிலோ எடை கொண்ட பிரம்மோஸ் ஏவுகணை, ஒலியைவிட 3.5 மடங்கு வேகத்தில் சீறிப் பாயக் கூடியது. 300 கிலோ வெடிகுண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்டது. இந்த ஏவுகணையின் வேகம், சீறிப் பாயும் தொலைவு தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது பிரம்மோஸ் ஏவுகணை 500 கி.மீ. வரையிலான இலக்குகளை துல்லியமாகத் தாக்கி அழிக்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் 800 கி.மீ. தொலைவு தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்களை அழிக்க பிரம்மோஸ் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன. மேலும் இரு நாடுகளுக்கு இடையிலான போரின்போது பாகிஸ்தானின் 11 விமானப் படைத் தளங்களை குறிவைத்து பிரம்மோஸ் ஏவுகணைகள் ஏவப்பட்டன. குறிப்பாக பாகிஸ்தான் விமானப் படையின் தலைமை அலுவலகமான நூர்கான் விமானப் படைத் தளம், பிரம்மோஸ் தாக்குதலில் உருக்குலைந்தது.

இந்தியா, ரஷ்யாவின் கூட்டுத் தயாரிப்பு என்பதால் ரஷ்ய ராணுவமும் பிரம்மோஸ் ஏவுகணைகளைப் பயன்படுத்தி வருகிறது. இந்த ஏவுகணை ரஷ்யாவில் ‘பி-800 ஒனிக்ஸ் யாக்ஹான்ட்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் அதிநவீன ஏவுகணை தடுப்புக் கவசங்கள் உக்ரேனில் நிறுவப்பட்டு உள்ளன. ஆனால் இந்த தடுப்புக் கவசங்களால் ரஷ்யாவின் ‘பி-800 ஒனிக்ஸ் யாக்ஹான்ட்’ ஏவுகணைகளை தடுத்து நிறுத்த முடியவில்லை. இதை உக்ரேன் ராணுவமே பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளது.

உக்ரேன் போர் மற்றும் ஆபரேஷன் சிந்தூரில் பிரம்மோஸ் ஏவுகணைகளின் திறனை பார்த்து ஒட்டுமொத்த உலகமும் வியப்பில் ஆழ்ந்திருக்கிறது.

சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியாவிடம் இருந்து பிலிப்பீன்ஸ் ஏற்கெனவே பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்கி எல்லைப் பகுதிகளில் நிறுவி உள்ளது.

தற்போது 17க்கும் மேற்பட்ட நாடுகள் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக இந்தோனீசியா, மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், கத்தார், ஓமன், எகிப்து, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு சிற்றரசுகள், புருணை, பிரேசில், சிலி, அர்ஜென்டினா, வெனிசூலா, பல்கேரியா, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது.

அனைத்துலக பாதுகாப்புத் துறை நிபுணர்கள், அமெரிக்காவின் ஹார்பூன் ஏவுகணைகளை ஆசிய நாடுகளிடம் விற்பனை செய்ய தீவிர முயற்சி செய்து வருகிறது. ஆனால் ஆசிய நாடுகள், இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்கவே விரும்புகின்றன என்று கூறியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்