லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் 17 பேர் உயிரிழந்துவிட்டனர். அவர்களில் ஐந்து பெண்களும் ஐந்து சிறார்களும் அடங்குவர்.
அங்குள்ள ஹாத்ரஸ் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை, ஒரு பேருந்தும் வேன் ஒன்றும் மோதிக்கொண்ட அந்தக் கோர விபத்தில், சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிரிழந்துவிட்டதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
அந்த வேனில் பயணம் மேற்கொண்ட பலர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
இவ்விபத்தை நேரில் கண்டவர்கள் உடனடியாக தகவல் தெரிவித்ததை அடுத்து, காவல்துறையினரும் தீயணைப்பு வீரர்களும் விரைந்து சென்று மீட்புப்பணிகளை மேற்கொண்டனர்.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் விபத்து குறித்து தீவிர விசாரணை நடைபெறுவதாகவும் காவல்துறை தெரிவித்தது.
இதற்கிடையே, பலி எண்ணிக்கை 17ஆக அதிகரித்துவிட்டதாக மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தெரிவித்தார்.
விபத்துக்குள்ளான வேனில் அளவுக்கு அதிகமானோர் பயணம் மேற்கொண்டதாகவும் விபத்துக்குப் பின்னர் நான்கு காவல் நிலையங்களை அந்த வேன் கடந்து சென்றபோதும் தடுத்து நிறுத்தப்படவில்லை என்றும் விபத்தைப் பார்த்த ஒருவர் தெரிவித்ததாக ஏபிபி லைவ் ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

