ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் பிரபல சார்மினார் நினைவுச்சின்னம் அருகே உள்ள கட்டடத்தில் தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தபட்சம் 17 பேர் உயிரிழந்தனர்.
குல்ஸார் ஹவுஸ் என்னும் அந்தக் கட்டடத்தில் மூண்ட தீயில் உயிரிழந்தோரில் ஐந்து பெண்களும் எட்டு குழந்தைகளும் அடங்குவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்தக் கடைவீடு பயங்கர தீயில் சிக்கியதாக ஞாயிற்றுக்கிழமை (மே 18) காலை 6.30 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக தீயணைப்புத் துறையினர் கூறினர். 11 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புப் படையினர் பெரும் சிரமத்திற்கு இடையே தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீயிலும் பெரும் புகையிலும் சிக்கி உயிரிழந்தோர் தவிர ஏராளமானோர் மயங்கி விழுந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அப்போலோ மருத்துவமனை, ஓஸ்மானிய, யசோதா (மாலக்பேட்), டிஆர்டிஓ ஆகிய மருத்துவமனைகளுக்கு அவர்கள் விரைந்து கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருப்பினும், எட்டுப் பேர் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தனியார் மருத்துவமனையின் மூத்த அதிகாரி ஒருவர் ஊடகங்களிடம் கூறினார்.
கட்டடத்தில் தீப்பிடித்தற்கான காரணம் கண்டறியப்பட்டு வரும் வேளையில் மின்கசிவால் தீவிபத்து நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
எட்டுப் பேர் மட்டுமே பலியானதாக முதற்கட்ட அதிகாரபூர்வத் தகவல்கள் வெளியாயின. இருப்பினும் அந்த எண்ணிக்கை 17 என்று ஊடகங்கள் தெரிவித்தன.
தொடர்புடைய செய்திகள்
கட்டடத்தில் உள்ள ஒரு நகைக்கடை ஒன்றில் தீப் பிடித்ததாகவும் பின்னர் அந்தக் கடையின் மேல் உள்ள குடியிருப்புப் பகுதிக்குத் தீ பரவியதாகவும் கூறப்படுகிறது.
தீ விபத்து நிகழ்ந்த வட்டாரம் பழம்பெரும் நகைக்கடைகளை உள்ளடக்கியது. அவற்றில் ஒருசில கடைகள் நூற்றாண்டு பழைமை வாய்ந்தவை.
அந்தக் கொடூர தீ விபத்தை அறிந்து தாம் பெரும் துயருற்றதாக தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறினார். பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக நிவாரண உதவிகள் வழங்கவும் மருத்துவமனைகளில் தேவையான சிகிச்சை வழங்கவும் அதிகாரிகளுக்குத் தாம் உத்தரவிட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.
அதேபோல, மத்திய அமைச்சர் ஜி கிஷன் ரெட்டியும் தீ விபத்து பற்றி அதிர்ச்சி தெரிவித்தார்.
பிரதமர் மோடி தமது எக்ஸ் பதிவில் கவலை தெரிவித்ததோடு உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாயும் காயமடைந்தோருக்கு 50,000 ரூபாயும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இரண்டு நாள்களுக்கு முன்னர்தான் ஹைதராபாத்தின் பேகர் பஸாரில் உள்ள மூன்று மாடிக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

