மதுரை: மதுரையில் ஒரே இரவில் 17 வயது இளையர் ஒருவர் 25க்கும் மேற்பட்ட வாகனங்களைத் தனி ஆளாகச் சேதப்படுத்தியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செல்லூர் ஜம்பது அடி சாலையில் இருந்து கம்மாக்கரை சாலை வரை நள்ளிரவு நேரத்தில் ஆட்டோக்கள், மோட்டார்சைக்கிள்கள், கார்கள் போன்ற ஏராளமான வாகனங்களை அதன் உரிமையாளர்கள் நிறுத்துவது வழக்கம்.
கிட்டத்தட்ட அரை கிலோமீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படும்.
வழக்கம்போல் மார்ச் 2ஆம் தேதி இரவும் அவர்கள் வாகனங்களை நிறுத்தினர். மறுநாளான திங்கட்கிழமை (மார்ச் 3) வந்து தங்கள் வாகனத்தைப் பார்த்த உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
25க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டு இருந்தன. நடந்ததைக் குறித்து அறிய அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கருவிகளை மக்கள் ஆய்வு செய்தனர். அதில், சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்கள் அனைத்தையும் கனரக வாகனமான ‘ஜேசிபி’ இயந்திரத்தைப் பயன்படுத்தி 17 வயது இளையர் ஒருவர் சேதப்படுத்தியது தெரியவந்தது.
அந்த இளையரைக் கண்டுபிடித்து காவல்துறையிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
பெற்றோரிடம் சண்டை போட்டுக்கொண்டு கோபத்தில் அந்த இளையர் இதுபோன்று செய்திருக்கலாம் எனக் கூறப்பட்டது.
இருப்பினும், அந்த இளையரைப் பொதுமக்கள் பிடித்தபோது அவர் போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், போதைப் பொருள் உட்கொண்டதன் விளைவாக இப்படி நடந்து கொண்டாரா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

