பள்ளிப் பாடநூல்களில் 1,700 பிழைகள்; அதிகாரிகள் நால்வர் பணியிடைநீக்கம்

பள்ளிப் பாடநூல்களில் 1,700 பிழைகள்; அதிகாரிகள் நால்வர் பணியிடைநீக்கம்

1 mins read
5aba0272-ccd5-4dc2-a252-64ab3ac01055
பாடநூல்களில் எழுத்துப்பிழைகள், தவறான வரலாற்றுத் தகவல்கள், புகழாளர்களின் தவறான பெயர்கள், புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. - படம்: ஒடிசா டிவி

புவனேஸ்வர்: நடப்புக் கல்வி ஆண்டிற்கான ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளிப் பாடநூல்களில் 1,678 பிழைகள் கண்டறியப்பட்டதை அடுத்து, இந்தியாவின் ஒடிசா மாநிலக் கல்வித் துறை உயரதிகாரிகள் நால்வர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும் அறுவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி வெள்ளிக்கிழமை (ஜூன் 26) உத்தரவிட்டார்.

அந்நூல்களில் எழுத்துப்பிழைகள், தவறான வரலாற்றுத் தகவல்கள், புகழாளர்களின் தவறான பெயர்கள், புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.

குறிப்பாக, ஒடிசா சட்டமன்றத்திற்குப் பதிலாகக் கர்நாடகச் சட்டமன்றப் புகைப்படமும், கோனார்க் சூரியக் கோயிலுக்குப் பதிலாக ஹம்பி புகைப்படமும் அச்சிடப்பட்டிருந்தன.

மேலும், உலகப் புகழ்பெற்ற இயற்பியல் வல்லுநர் ஐசக் நியூட்டன் ஒரு ‘சிறந்த விமானி’ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

விநியோகத்திற்குப் பிறகு கண்டறியப்பட்ட இப்பிழைகளைச் ‘சிறியவை’ என்று கூறி, ஆசிரியர்களைக் கொண்டு கைகளால் திருத்த மாநிலக் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி மன்றம் முயன்றது. அதற்கு, எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தன.

அதையடுத்து அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் 14 பரிந்துரைகளையும் ஏற்றுக்கொண்ட அரசு, பாடநூல் தயாரிப்பை முழுமையாக மாற்றியமைக்க உத்தரவிட்டுள்ளது.

இனி மொழி, உள்ளடக்கம், தரம் ஆகியவற்றிற்குத் தகுந்த ஒப்புதல் பெறாமல் நூல்களை அச்சிடக் கூடாது என்றும் தரக் கட்டுப்பாட்டை உறுதிசெய்ய தனிப்பிரிவு அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

2026-27 கல்வி ஆண்டிற்காக ஒடிசாவில் ஏறத்தாழ 29.8 மில்லியன் பாட நூல்கள் அச்சிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்