தேர்வெழுத வராத 170,000 மாணவர்கள்; காரணம் இதுதான்!

1 mins read
bdabc65b-b76e-42cc-9974-a1d038be0b22
பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாகக் கூறி, வாரணாசியில் நால்வர் பிடிபட்டனர். மாதிரிப்படம் -

லக்னோ: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இப்போது பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.

முன்னெல்லாம் அம்மாநிலத்திலும் அண்டை மாநிலமான பீகாரிலும் மாணவர்கள் பார்த்தெழுவது, உறவினர்களும் நண்பர்களும் வெளியிலிருந்து விடைத்தாள்களைத் தூக்கிப்போடுவது என்பன போன்ற பல படங்கள் இணையத்தில் பரவலாகின.

அந்த அவப்பெயரே போதும், இனியும் வேண்டாம் என்று நினைத்த உத்தரப் பிரதேச கல்வித் துறை, இம்முறை அத்தகைய தில்லுமுல்லுகளைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமையன்று (21-03-2023) பத்தாம் வகுப்பிற்கான கணிதத் தேர்வு நடைபெற்றது. மொத்தம் 2,252,695 மாணவர்கள் தேர்வெழுத வேண்டிய நிலையில் 170,188 பேர் தேர்வு மையங்களுக்கு வரவில்லை என்று 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' செய்தி கூறுகிறது.

அதுபோல, பிற்பகலில் பன்னிரண்டாம் வகுப்பு வணிகவியல், மனையியல் பாடங்களுக்கும் பத்தாம் வகுப்பு கணினியியல் பாடத்திற்கும் அதேநாள் பிற்பகலில் தேர்வு நடந்தது. மொத்தம் 425,411 பேர் தேர்வெழுத வேண்டிய நிலையில் 25,072 பேர் வரவில்லை.

கண்காணிப்புப் படக்கருவிகள் மூலம் தேர்வு மையங்களும், தேர்வு மையக் கண்காணிப்பாளர்களும், தேர்வுக்கூட மேற்பார்வையாளர்களும் அணுக்கமாகக் கண்காணிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, பத்தாம் வகுப்பிற்கான கணிதத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியில் நால்வர் பிடிபட்டனர்.