புவனேஸ்வர்: ஒடிசாவில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான புதிய பள்ளிப் பாடப்புத்தகங்களில் மொத்தம் 1,741 பிழைகள் கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில பள்ளி, கல்வித்துறை அமைச்சர் நித்யானந்த கோண்ட் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு எழுத்துபூர்வமாகப் பதிலளித்த அமைச்சர், பாடப்புத்தகங்களில் கருத்துப் பிழைகள், உண்மைக்குப் புறம்பான தகவல்கள், இலக்கண, அச்சுப்பிழைகள் இடம்பெற்றிருப்பதை ஒப்புக்கொண்டார்.
அத்தகைய பிழைகளில் அதிகபட்சமாக 8ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களில் 707 தவறுகள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் அறிவியல் பாடப் புத்தகத்தில் மட்டும் 294 பிழைகள் இருப்பது பெற்றோர், கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் 1,678 பிழைகள் இருப்பதாகப் பட்டியலிட்டிருந்த நிலையில், அமைச்சரின் அறிக்கையில் அதைவிடக் கூடுதல் தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
கொணர்க்க சூரியன் கோவில் அடையாளம், நியம் கிரி மலையின் அமைவிடம், சட்டமன்றப் புகைப்படம் உள்ளிட்ட முக்கியத் தகவல்களில் பிழைகள் இருந்தன. இதற்காக, பிழைதிருத்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுப் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் திருத்தப்பட்ட புதிய புத்தகங்கள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஏறக்குறைய ரூ.175 கோடி செலவில் அச்சிடப்பட்ட அந்தப் பாடப்புத்தகங்களில் இவ்வளவு தவறுகள் இடம்பெற்றுள்ளதைத் தொடர்ந்து, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர், மூன்று உதவி இயக்குநர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், ஆறு உதவி இயக்குநர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுகுறித்து குற்றப் புலனாய்வுத்துறை விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
