தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$18.52 மி. இணையக் குற்றங்கள்: டெல்லியில் சிபிஐ சோதனை

2 mins read
6221d37a-2dd3-4461-bc8d-81e8c596ad1c
மத்திய புலனாய்வுப் பிரிவின் சின்னம். - படம்: indiatvnews.com / இணையம்

புதுடெல்லி: இந்தியாவின் மத்தியப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ), 1.17 பில்லியன் ரூபாய் (18.52 மில்லியன் வெள்ளி) மதிப்புள்ள எல்லை தாண்டிய இணையக் குற்றங்கள் சம்பந்தப்பட்ட மோசடி தொடர்பில், தலைநகர் டெல்லி, அதன் சுற்று வட்டாரங்களில் உள்ள 10 இடங்களில் புதன்கிழமையன்று (டிசம்பர் 5) சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

என்டிடிவி போன்ற ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டன.

இந்தியாவின் உள்துறை அமைச்சின் இணையக் குற்ற ஒருங்கிணைப்பு நிலையத்திடம் (I4C) அளிக்கப்பட்ட புகாரின் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்பில் சிபிஐ சோதனைகளை நடத்தியது.

அடையாளம் தெரியாத இணையக் குற்றக் கும்பல்களைச் சேர்ந்தோர், வெளிநாடுகளைச் சேர்ந்த சந்தேக நபர்கள் ஆகியோர் இந்தியா முழுவதும் திட்டமிட்ட நிதி மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இந்த விவகாரம் குறித்த முதல் தகவல் அறிக்கையில் அந்த விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

“வெளிநாடுகளில் இயங்கும் ஏமாற்றுக்காரர்கள் இணையத்தளங்கள், வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற மின்னிலக்கத் தளங்களைப் பயன்படுத்தி இந்தியாவில் இருப்போரைக் குறிவைத்து செயல்பட்டதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது,” என்று மத்தியப் புலனாய்வுப் பிரிவுப் பேச்சாளர் ஒருவர் அறிக்கை மூலம் தெரிவித்தார். பகுதிநேர வேலை வாய்ப்பு, முதலீடுகள் போன்றவற்றின் தொடர்பிலான மோசடிச் செயல்களில் அவர்கள் ஈடுபட்டதாகவும் அந்தப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

குருகிராமில் உள்ள இரு இடங்கள், டெல்லியில் உள்ள எட்டு இடங்கள் ஆகியவற்றில் நடத்தப்பட்ட சோதனைகளில் குற்றச் செயல்கள் இடம்பெற்றதற்கான ஆதாரம் கிடைத்ததாக அவர் தெரிவித்தார். சோதனை நடந்த இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட மின்சாரப் பொருள்கள், நிதி விவர ஆவணங்கள் ஆகியவை அந்த ஆதாரங்களில் அடங்கும் என்றும் அவர் சொன்னார்.

இந்த மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 10 தனி நபர்கள் இருந்த இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்