திருச்சூர்: இந்தியாவின் கேரள மாநிலம், திருச்சூர் பூங்குன்னம் பகுதியிலுள்ள ஒரு வீட்டிலிருந்து கடந்த இரண்டு நாள்களில் 18 மலைப்பாம்பு குட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.
அங்குள்ள எம்.ஜி. நகரில் வசிக்கும் கார்த்திக் என்பவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு மோட்டார்சைக்கிள்களுக்குள் அந்த பாம்புக்குட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தகவலறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 18 பாம்புக்குட்டிகளையும் பாதுகாப்பாக மீட்டனர்.
கார்த்திக் தமது வயதான பெற்றோர், மனைவி மற்றும் குழந்தையுடன் அந்த வீட்டில் வசித்து வருகிறார்.
வீட்டிற்கு அருகே உள்ள புதர்மண்டிய தாவரங்கள் மற்றும் நீரோடையில் இருந்து அந்தப் பாம்புக்குட்டிகள் வீட்டிற்குள் நுழைந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில், தம் வீட்டின் முற்றத்தில் இருக்கும் சேதமடைந்த கான்கிரீட் தரைக்கு அடியில் மேலும் பல பாம்புகள் ஒளிந்திருக்க வாய்ப்புள்ளதாக கார்த்திக் அஞ்சுகிறார்.
இதனையடுத்து, வனத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (ஜூன் 12) அந்த கான்கிரீட் தரையை உடைத்து, அங்கும் பாம்புக்குட்டிகள் உள்ளனவா என சோதனை நடத்துவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

