புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 18 பங்ளாதேஷியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஐவர் திருநங்கைபோல வேடமிட்டு சுற்றித் திரிந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களின் ஏழு கைப்பேசிகளில், தடைசெய்யப்பட்ட உரையாடல் செயலி ஒன்று நிறுவப்பட்டிருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
அந்தச் செயலியைப் பயன்படுத்தி அவர்கள் பங்களாதேஷில் உள்ள தங்களது குடும்பத்தினருடன் தொடர்புகொண்டதாகக் காவல்துறை கூறியது.
சட்டவிரோதமாகக் குடியேறிய பங்ளாதேஷியரைக் கைது செய்ய இருகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
முதற்கட்டமாக, டெல்லியில் ஏறத்தாழ 100 கூடாரங்கள் மற்றும் 150 பாதைகளைக் காவல்துறையினர் மறைத்து அந்த வட்டாரத்தை சுற்றி வளைத்து, அங்கு வசித்தவர்களின் அடையாளங்களை சோதனை செய்தனர்.
தொடக்கத்தில் ஒரு பங்ளாதேஷி பிடிபட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது குடும்ப உறுப்பினர்கள் சிக்கினர்.
மூன்று குழந்தைகள் உட்பட 13 பங்ளாதேஷியர் எந்தவிதமான ஆவணங்களும் இன்றி அங்கு தங்கி இருந்தது தெரிய வந்தது.
தொடர்புடைய செய்திகள்
மற்றொரு நடவடிக்கையில், மாறுவேடத்தில் இருந்த ஐந்து பங்ளாதேஷியர் சிக்கினர். காவல்துறையின் சந்தேகக் கண்களில் படாமல் இருக்க திருநங்கைபோல அவர்கள் வேடமிட்டு இருந்தனர்.
பெண்களின் கூந்தல், முக அலங்காரம், உடை ஆகியவற்றை அணிந்து மக்களோடு மக்களாக அந்த ஐவரும் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக டெல்லி காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அந்த ஐவரும் தங்களது தோற்றத்தையும் குரலையும் மாற்ற அறுவைச் சிகிச்சையும் ஹார்மோன் சிகிச்சையும் மேற்கொண்டதையும் காவல்துறை கண்டுபிடித்தது.
அடையாளத்தை மறைப்பதற்காகவே அவ்வாறு வேடமிட்டு சுற்றித் திரிந்ததாக ஐவரும் காவல்துறையிடம் ஒப்புக்கொண்டனர்.
பிடிபட்ட 18 பேரும், கூடுதல் விசாரணைக்காகவும் அடையாள சரிபார்ப்புக்காகவும் இந்திய வெளியுறவுத் துறையின் வெளிநாட்டினர் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் பங்ளாதேஷின் டாக்கா, குல்னா, காஸிபூர், அஷ்ராஃபாபாத் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது.