லக்னோ: அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள உத்தரப் பிரதேச மாநிலத்தில் கிட்டத்தட்ட 18.8 லட்சம் வாக்காளர்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
புதிதாக சேர்க்கப்பட்டவர்களில், ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட எஸ்ஐஆரில் விடுபட்டவர்களும் அடங்குவர்.
எஸ்எஸ்ஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் அந்த மாநிலத்தில் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக வரைவு வாக்காளர் பட்டியலை மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி நவதீப் ரின்வா செவ்வாய்க்கிழமை (நவம்பர் 17) லக்னோவில் வெளியிட்டார்.
அதன்பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “எஸ்எஸ்ஆர் 2027ன் கீழ் உள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் 13 கோடியே 58 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
“இவ்வாண்டுத் தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட எஸ்ஐஆர் நடவடிக்கைக்குப் பிறகு ஏப்ரல் 10ஆம் தேதி இறுதியில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதிலிருந்து, இந்த வரைவுப்பட்டியலில் கிட்டத்தட்ட 11 லட்சம் பெண்கள் உட்பட 18.8 லட்சம் வாக்காளர்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்,” என்றார்.
வாக்காளர் வரைவுப் பட்டியல் தொடர்பான ஆட்சேபங்களுக்கான காலக்கெடு நவம்பர் 17 முதல் டிசம்பர் 16 வரை திறந்திருக்கும்.
இந்தக் காலகட்டத்தில், தகுதியுள்ள குடிமக்கள் வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளைச் சேர்க்க, நீக்க அல்லது திருத்துவதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் நவதீப் ரின்வா கூறினார்.
தேர்தல் ஆணையம் வாக்காளர்களின் சமயம் அல்லது சாதி குறித்த தரவுகளைப் பராமரிப்பதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
