புதுடெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு

2 mins read
கும்பமேளா செல்வதற்காக ஒரே நேரத்தில் அதிக பயணிகள் திரண்டதால் சோகம்
6fe0918c-00f2-4362-8cf2-6bc46e9a4fa8
நடைமேடை 13,14,15 ஆகியவற்றில் சிதறிக்கிடக்கும் பயணிகளின் உடைமைகள். - படம்: இந்திய ஊடகம்
multi-img1 of 3

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்வு நடந்துவருகிறது.

இதில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை (பிப்ரவரி 15) இரவு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் புதுடெல்லி ரயில் நிலையத்தில் திரண்டனர்.

பிரயாக்ராஜ் செல்லும் ரயிலில் பயணிக்க வேண்டி ஒருவரை ஒருவர் முண்டியடித்து கொண்டு பயணிகள் ஓடியதால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

நெரிசலில் சிக்கி 18 பேர் மாண்டதாகவும் பலர் காயமடைந்ததாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புதுடெல்லி ரயில் நிலையத்தின் நடைமேடை 13,14,15 ஆகியவற்றில் நின்றிருந்த உத்தரப் பிரதேசத்திற்குச் செல்லும் ரயிலில்களில் ஏற பயணிகள் முண்டியடித்ததால் இத்துயரச் சம்பவம் நடந்தது.

உயிரிழந்தவர்களில் மூவர் குழந்தைகள் என்றும் பலர் காயமடைந்தனர் என்றும் புதுடில்லி எல்.என்.ஜே.பி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

பிரயாக்ராஜ் செல்லும் இரு ரயில்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நான்கு தீயணைப்பு வாகனங்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டன. நெரிசலில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து குறித்து உயர் மட்ட குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே கூட்ட நெரிசல் ஏற்பட்ட நடைமேடையில் பயணிகள் தங்களது உடைமைகளை விட்டுச் சென்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. தண்ணீர் பாட்டில், காலணி, பைகள் போன்றவை ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன.

இச்சம்பவத்தில் மாண்டோரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சமும் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சமும் லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் இழப்பீடு வழங்கப்படும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

பிரதமர், அதிபர் இரங்கல்

“புதுடெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்த செய்தி கேட்டு மனம் வருந்தினேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழந்த இரங்கலை தெரிவிப்பதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்,” என்று இந்திய அதிபர் திரௌபதி முர்மு வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

“கூட்ட நெரிசலில் சிக்கி தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடுபவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். இந்த கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அதிகாரிகள் உதவி செய்து வருகின்றனர்,” என பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோரும் இச்சம்பவத்திற்கு இரங்கலை தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் உடல்களையும் எல்என்ஜேபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் டெல்லி ஆளுநர் வி.கே.சக்சேனா, புதுடெல்லி முதல்வர் ஆதிஷி ஆகியோர் நேரில் சென்று பார்த்தனர்.

குறிப்புச் சொற்கள்