புதுடெல்லி: கட்டடத்தின் இரண்டாம் மாடியில் பொருத்தப்பட்டிருந்த குளிரூட்டி விழுந்து, கீழே வாகனத்தில் அமர்ந்திருந்த 18 வயது இளையர் ஒருவர் உயிரிழந்தார்.
அவருடன் பேசிக்கொண்டிருந்த இன்னொருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவ்விபத்து இந்தியத் தலைநகர் புதுடெல்லியின் கரோல் பாக் பகுதியில் நிகழ்ந்தது.
சம்பவம் குறித்த காணொளி கண்காணிப்புப் படக்கருவியில் பதிவாகியுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி தெரிவிக்கிறது.
ஜிதேஷ் என்ற அந்த இளையர் ஸ்கூட்டரில் அமர்ந்திருந்தபடி, பிரான்ஷு என்ற தம் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். பிரான்ஷு அவரை அணைத்து விடைபெற முயன்ற நேரத்தில், அவர்களின்மீது குளிரூட்டி விழுந்தது.
உடனடியாக இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பில் காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. கவனக்குறைவாக இருந்து, உயிரிழப்பை ஏற்படுத்தியதாகக் கூறி, வழக்கு பதியப்பட்டுள்ளது. வல்லுநர்கள் அவ்விடத்தை ஆராய்ந்துவருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவத்தால் அந்த அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகள் விழிப்படைந்துள்ளனர். தங்கள் வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள குளிரூட்டிகளைச் சோதிக்க, அவர்கள் பொறிவேலை செய்வோரை நாடிவருகின்றனர்.

