பெங்களூரு: வரும் 2025-26 நிதியாண்டில், 1.84 லட்சம் தெருநாய்களுக்கு ‘தொகுப்புத் தடுப்பூசி’ போடப்படும் என்று பெங்களூரு மாநகராட்சியின் தலைமை ஆணையர் துஷார் கிரிநாத் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு மாநகராட்சித் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) தொகுப்புத் தடுப்பூசித் திட்டத்தைத் திரு கிரிநாத் அறிமுகப்படுத்தினார்.
பெங்களூரில் தெருநாய்களுக்குப் பல நோய்களைத் தடுக்கும் தொகுப்புத் தடுப்பூசி போடப்படுவது இதுவே முதன்முறை என்று அவர் சொன்னார்.
தெருநாய்த் திட்டத்திற்காக ரூ.4.98 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.4.40 கோடி தடுப்பூசிக்காகவும் எஞ்சிய தொகை அதற்கான சேமிப்பிட வசதிகளை ஏற்படுத்த பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விலங்குப் பிறப்புக் கட்டுப்பாட்டுத் திட்டத்தையும் தெருநாய்களிடம் வெறிநாய்க்கடித் தடுப்பூசித் திட்டத்தையும் பெங்களூரு மாநகர விலங்குநலத் துறை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளதாகத் திரு கிரிநாத் கூறினார்.
ஆயினும், உயிரைப் பறிக்கவல்ல தொற்றுநோய்கள் தெருநாய்களிடம் பரவாமல் தடுக்க தொகுப்புத் தடுப்பூசி போட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதை அவர் வலியுறுத்தினார்.
கடந்த 2023ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, பெங்களூரு மாநகரில் 2.79 லட்சம் தெருநாய்கள் உள்ளன.
சோளிங்கரில் வெறிநாய் கடிக்கு ஆளான 8 பேர்
தமிழகத்தின் சோளிங்கர் பகுதியில் வெறிநாய்க்கடிக்கு ஆளான 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
அவர்களில் ஏழு பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய நிலையில், ஏழு வயதுச் சிறுவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதற்கிடையே, அப்பகுதியில் தெருநாய் ஒன்று இறந்து கிடந்ததை அடுத்து, யாரேனும் அதை கொலை செய்தனரா என்று காவல்துறை விசாரிக்கிறது.

