இடாநகர்: அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் சிறுவர், சிறுமிகளை விலைக்கு வாங்கி வெளிமாநிலங்களுக்குக் கடத்தத் திட்டமிட்ட கும்பலிடமிருந்து 19 பேரை அம்மாநிலக் காவலர்கள் மீட்டுள்ளனர்.
இடாநகர், மெச்சுகா, ஆலோ உள்ளிட்ட பகுதிகளில் காவலர்கள் தீவிரச் சோதனை நடத்திக்கொண்டிருந்தபோது, மூன்று வயது குழந்தை உள்பட 19 சிறார்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
அவர்களில் பெரும்பாலானோர் எட்டு வயதுக்கு உட்பட்டவர்கள். இது தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டனர்.
மீட்கப்பட்ட அனைத்துச் சிறார்களும் நாம்சாய் நகருக்கு அழைத்துச்செல்லப்பட்டு, அவர்களது பெற்றோர், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
“வறுமையில் வாடும் குடும்பங்களிடம் ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை கொடுத்து சிறார்களைக் கடத்தல் கும்பல் விலைக்கு வாங்கியுள்ளது. அவர்களில் ஒரு சிலரைக் கடத்தி வந்துள்ளனர்.
“உணவகங்கள், தேயிலைத் தோட்டங்கள், வீட்டு வேலைகளில் ஈடுபடுத்த அவர்களை வெளிமாநிலங்களுக்குக் கடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
“அருணாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த காவலர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டு 19 சிறார்களையும் மீட்டுள்ளோம்,” என்று காவலர்கள் தெரிவித்தனர்.


