புதுடெல்லி: தமிழகத்தைச் சேர்ந்த அன்புமணி ராமதாஸ், எல்.கே.சுதிஷ், திருச்சி சிவா உட்பட மொத்தம் 19 புதிய உறுப்பினர்கள் மாநிலங்களவை உறுப்பினர்களாக திங்கட்கிழமை (ஏப்ரல் 6) முறைப்படி பதவியேற்றுக் கொண்டனர்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இந்த விழாவில், மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் முன்னிலையில் உறுப்பினர்கள் பதவியேற்றனர். இந்நிகழ்வின்போது மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் உடனிருந்தனர்.
மாநில வாரியான உறுப்பினர்கள் விவரம்
பதவியேற்ற 19 உறுப்பினர்களில் பெரும்பாலானோர் தங்கள் தாய்மொழியிலேயே உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தமிழ்நாடு (6 பேர்)
அன்புமணி ராமதாஸ் (பாமக), எல்.கே. சுதிஷ் (தேமுதிக), திருச்சி சிவா (திமுக), தம்பிதுரை (அதிமுக), கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் (திமுக), கிறிஸ்டோபர் மாணிக்கம் (காங்கிரஸ்).
மகாராஷ்டிரா (5 பேர்)
சரத் பவார் (தேசியவாத காங்கிரஸ் - எஸ்பி), மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே, மாயா சிந்தமான் இவ்னேட் (பாஜக), ராம்ராவ் சக்காரம் வட்குடே (பாஜக), ஜோதி நாக்நாத் வாக்மாரே (சிவசேனா).
மேற்கு வங்கம் (5 பேர்)
பாபுல் சுப்ரியா பரல், மேனகா குருசாமி, ராஜிவ் குமார், ருக்மணி மல்லிக் (நால்வரும் திரிணாமூல் காங்கிரஸ்), விஸ்வஜித் சின்ஹா (பாஜக).
ஒடிசா (3 பேர்)
மன்மோகன் சமல் (பாஜக), சன்ருப்ட் மிஸ்ரா (பிஜேடி), திலிப் குமார் ரே (சுயேச்சை).
புதிதாகப் பதவியேற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் அவையின் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்து, மாநிலங்களின் பிரதிநிதிகளாகத் தங்களது பணிகளைச் சிறப்பாக வழிநடத்திச் செல்ல அறிவுறுத்தினார்.

