சென்னை: தமிழக அரசு, தேனாம்பேட்டைக்கும் சைதாப்பேட்டைக்கும் இடையே மேம்பாலம் கட்டுவதற்கான செலவு மதிப்பீடு செய்துள்ளது. அதன்படி ஒரு கி.மீட்டர் நீள பாலம் கட்டுவதற்கான செலவு ரூ.195 கோடியாக இருக்கும். இதனைக் கேள்வியுற்ற பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அலறாத குறையாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
“சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், தேனாம்பேட்டை தொடங்கி சைதாப்பேட்டை வரை மொத்தம் 3.21 கி.மீ தொலைவுக்கு 4 வழி உயர்மட்டச் சாலை தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்பட்டு வருகிறது.
“இந்தப் பாலம் அமைப்பதற்கான திட்டச் செலவு ரூ.621 கோடியாக உயர்த்தப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத அளவுக்கு மிகவும் அதிக மதிப்பீடு ஆகும். இந்த மதிப்பீடு பல வகையான ஐயங்களை எழுப்புகிறது.
“கடந்த ஐந்தாண்டுகளில் சென்னையில் கட்டப்பட்ட பாலங்களின் திட்டச் செலவைவிட இதன் செலவு கிட்டத்தட்ட இரு மடங்காக உள்ளது. 2021 ஆம் ஆண்டு கோயம்பேடு பேருந்து நிலையம் முன்பாக கட்டப்பட்ட பாலத்திற்கு கி.மீக்கு ரூ.95 கோடியும், 2022 ஆம் ஆண்டு மேடவாக்கத்தில் கட்டப்பட்ட பாலத்திற்கு கி.மீக்கு ரூ.101 கோடியும் மட்டும்தான் செலவாகியுள்ளது.
“தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் மூலம் கட்டப்படும் மேம்பாலங்கள் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் கட்டப்படும் மேம்பாலங்களை விட தரத்திலும் வடிவமைப்பிலும் சிறப்பானதாக இருக்கும் என்பதால் அவற்றின் கட்டுமானச் செலவு சற்று அதிகமாகவே இருக்கும்.
“ஆனால், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மூலம் கட்டப்பட்ட மதுரை & நத்தம் மேம்பாலம் சராசரியாக கி.மீக்கு ரூ.100 கோடி செலவில்தான் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், தேனாம்பேட்டை & சைதாப்பேட்டை மேம்பாலம் அதைவிட 95% செலவில் கட்டப்பட்டு வருவது ஏன் என்பதுதான் வினா,” என்று தான் வெளியிட்ட அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
“மக்கள் வரிப்பணத்தில் ஒரு ரூபாய் கூட சுரண்டப்படுவதை அனுமதிக்க முடியாது. தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை உயர்மட்ட மேம்பாலத்திற்கான திட்ட மதிப்பு இயல்பை விட 50%க்கும் கூடுதலாக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும்,” என்று அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.